67. எவ்வகைச் சுகங்களும் இனிதுற வளித்தருள்
68. அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) எது உண்மையானதும், நிறைவானதும், நிலைத்திருப்பதுமான சுகம் என்று அறிந்துகொள்ளாமல்தான், புலபோக இச்சையால் மனத்தெழும் அவாவால், எதை எதையோ சுகம் எனக் கருதி அடைய முயல்கின்றான் மனிதன். அம்முயற்சி கைகூடினால் மகிழ்ச்சி அடைகின்றான். அப்படிக் கிடைத்த சுகம் சீக்கிரமே மறைந்துபோக வேறொன்றை நாடுகின்றான். அதனாலும், நிலைத்த இன்பம் உண்டாவதாயில்லை. ஆகையால், அவ்வின்பம் அடைய மேற்கொண்ட பாடுகள் யாவும் வீண் என்றுதான் கருதுகின்றான். முடிவில் அப்படி வீண் என்று கொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அப்படி ஒரு அனுபவம் உண்டாகித்தான் அதனிடத்தில் விருப்பு வெறுப்பற்று, மேனிலைக்குச்செல்ல பக்குவம் ஏற்படுகின்றாதாம். எல்லாம்தர வல்லான் இறைவன் அன்றியும் அவன் நமக்கு மேலான பேரின்ப வாழ்வை வழங்கவே திருவுளம் கொண்டுள்ளான். ஆனால் நாமோ ஆண்டவரின் திருவுள்ளத்தை அறியாது, அவர் அருளும் நிறையின்ப வாழ்வையும் அறியாது புலன் இன்ப நாட்டத்தோடு ஏதேதோ வேண்டிப்பெற்று அவத்தையுறுகின்றோம்.
நமக்கு இன்ப வாழ்வுக்கு தேவை இன்னதுதான் என்று நாம் அறியோம், புற நாட்டமும் இச்சையும் நம் மன அறிவை நன்கு மூடிக்கொண்டிருக்கின்றன. இப்புலன் ஆசையை நீக்கித் திருமுன் நின்று வேண்டும்போது, நாம் எதையும் குறித்துக் கேட்க விரும்பாது, ஆண்டவர் திருவுள்ளம் யாதோ, யாதோ, அவரது திருவுள்ள விழைவின்படி அருளட்டும் என்று அகநெகிழ்வோடிருந்துவிடுவதே சரியானதாய் அறிகின்றோம். அப்படி இருந்துவிடுவதால் கடவுள் அருள் நம் உண்மைத் தேவைக்குத் தக யாவையும் முறையாகக் கொடுத்துப் பக்குவப்படுத்தி மேனிலைக்கு ஏற்றிவிடுகின்றதாம்.
“வேண்டத் தக்க தறிவோம் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன்று ண்டெனில்
அதுவும் உன்றன் விருப்பன்றே”
என்று மணிவாசகர் தன் வேண்டுகையைத் திருவுள்ளத்தின் விருப்பிற்கே விடுகின்ற திறம் போற்றிக்கொள்ளத் தக்கதாம். ஆகவே நாம் ஆண்டவரிடம் அவரது நிறை அருளையே வேண்டி நின்றால், அவ்வருள் தானே நமக்கு வேண்டியாங்கு வழங்கி வாழ்விப்பதாம்.
நாமோ அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை வாசத்தால், அவருடன் இரண்டற இருக்கின்ற இயல்பையே உணர்ந்து சிற்சபையில் நிற்கின்றோம். ஆனால் சூழுடம்பின் பற்றாலும், புற நிலைவாழ்வாலும்,அக அருளனுபவம்பெறாது இருக்கின்றோம். ஆகையால், நமக்கு ஆண்டவர் திருவருள் உண்ணின்று நிறையின்ப வாழ்வில் தழைக்கச் செய்ய வேண்டுவதே நம் உண்மைத் தேவையாம். அதனையே வேண்டி அருளால் அருட்பேரின்ப நிலையுறுவது நம் கடமையாகும்.
முன்னோர் இச் சிற்சபையின் புறத்திருந்து வேண்டினது யாவும் கடவுள் வழங்கியும், அவைகொண்டு குறிப்பிட்ட காலம் வரையிருந்தும் மறைவுற்றனர் அவர்கள் எல்லாம் ,சிறப்பாக அவர்கள் அச்சிற்சபேசரின் நிறைநிலையைப் புறத்திருந்து கண்டு ஒன்ற முற்பட்டதால், அப்படியே இரண்டறக் கலந்து ஒழியத்தான்முடிந்ததாம். ஆகையால், திருவடியிற் கலந்து மறைந்து ஆன்மாக்கள் அந்நிலையில் தாம்கெட்டு அதுவாய் இருந்தும் இல்லாதவர்களாய் எவ்வளவு காலம் இருப்பினும் என்ன பயனோ’ அந்த நிறையின்ப இறையனுபவம் மறையாது விளங்கச்செய்யவேண்டியே இன்று நம்மையும் சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதியோடு அத்துவிதமாய் விளங்கவைத்துள்ளார் நம் பதி “ திரு அம்பலவன் திருநோக்கம் பெற்றார்க்கு உரு அம்பலத்தே என்று உன்” என்பது அருட்பெருஞ்ஜோதி வள்ளல் வாக்கும்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment