
59. என்றா தியசுடர்க் கியநிலை யாயது
60. அன்றாந் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) உலகில் தோற்றியுள்ள பேரொளி அண்டங்கள் தாம் முதற்படைப்பாக விளங்குகின்றன. அப்பேரொளி அண்டங்கள் பலகோடியுள்ளனவாம். இவ்வொளிக் கோளங்கள் மிக மிகத் தொலைவிலிருந்து ஒளிவீசுவதால் சிறு சிறு விண்மீன்களாகத் தோற்றுகின்றன. இந்த ஒளிக்கோளத்தில் ஒன்றே நம் நிலவுலகுக்கு அணித்தே இருப்பதால் பெரிய ஜோதி ஞாயிறாக விளங்குகின்றது. இந்தச் சூரியனே உலகுக்கு உயிராம். இதிலிருந்துதான் நம் பூவுலகுக்கு , செவ்வாய் முதலிய கோள்களுக்கும் எல்லாவிதமான ஒளியும் ஆற்றலும் கிடைக்கின்றனவாம். ஞாயிறும் மற்ற விண்மீன்களும் ஒளியுடையன ஆதலின் நாள் எனப்படும். ஞாயிற்றின் ஒளியும் ஆற்றலும் கொண்டு விளங்கும் ஒளியுற்ற அண்டங்கள் கோள் எனப்படும். இக்கோள் இரவியிடத்திலிருந்து ஒளி ஆற்றலைக் கிரகித்துக்கொண்டு விளங்கலால் கிரகம் எனவும் கூறப்படும்.
என்று அல்லது என்றூழ் என்பது சூரியனைக்குறிக்கும். சூரியனில் ஒளியும், சூடும், இயக்க ஆற்றலாகிய கிரியாசக்தியும் உள்ளன. இதனால், ஒளி, சுடர், ஜோதி ஆக விரிந்துள்ளதாய்க் காண்கின்றோம். இந்த ஒளிநிலைக்கெல்லாம் முதலாக இருப்பது சூரியனே என்ற கருத்து என்றாதிய சுடர் என்றதால் விளங்குவதாம். இந்த ஞாயிற்றுக்கும் இதுபோன்ற விண்மீன்களுக்கும் இயனிலை அல்லது தாயகம் எதுவென்றால் அதுதான் அகண்ட வெளியெல்லாம் நிரம்பியுள்ள இயற்கை நுண்ணொளியாம். இவ்வொளி நிலைநின்றே எல்லா ஜோதி கோளங்களும் தோன்றி விளங்குகின்றனவாம். இந்த ஒளி எங்கணும் நிரம்பியுள்ளதால் நம் தலை நடுவுள்ளும் இருக்கின்றதும் இயல்பே. இங்கு விளங்கும் அந்த ஜோதி நிலை, நிறையருள்மயமாய் அருட்பெருஞ்ஜோதி எனத் திகழ்கின்றதாம். இதுவே கடவுள் உண்மை வெளிபாட்டிலங்கும் திருச்சபையாக அறியப்படுகின்றது.
நமது அருட்பெருஞ்ஜோதி எல்லாவற்றிற்கும் முழுமுதற்காரண்மாய் இருக்கின்றது. உலகம் என்றாதிய சுடர்களைக் கண்டுள்ளது. இவ்வான் சுடர்களுக்குத் தாயகமான விண்ணொளியையும் அறிந்திருக்கின்றது. ஆனால், இவைகளுக்கெல்லாம் ஆதாரமாயும், இவற்றில் எதுவும் அல்லாததாயும், இவற்றிற்கு அதீதமாயும் இருக்கின்றது நம் சத்தியஞானத் திருச்சபையில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரை விளக்கம்
Write a comment