
57. வேதா காமங்களின் விளைவுகட்கெல்லாம்
58. ஆதாரமாஞ் சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) முன் அடிகளில் நம் ஆன்ம சிற்சபையே அனுபவ வெளியிடமாய், அதில் ஒளிரும் அருட்ஜோதியே ஆரணமும் ஆகமுமாய்உள்ளெதெனப் பொதுவாகக் குறிக்கப்பெற்றது. இங்கு அந்த அருட்பெருஞ்ஜோதியே பலப்பல வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அடிப்படை ஆதாரமாய் இருந்து யாவையும் தோற்றுவித்துள்ளது என்பதை யுணர்கிறோம்.
கற்பனை கடந்த மெய்ப்பொருளாய்த் திகழ்கின்ற அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை உண்மையில் அறியாதுதான் இதுவரை எத்தனை பெரியோர்கள், எத்தனை கோணங்களிலிருந்து, எத்தனை வகையில் கண்டு, கண்டு, வேறு வேறு வண்ணமும், வடிவும், பெயரும், இயலும், ஆற்றலும் செயலும் கொண்டதாய் க் குறித்திருக்கின்றனர். மேலும், அவர்கள் கண்டறிந்த அந்தக் கடவுளை அடைய, அவர்தம் அருளைப்பெற்று உய்ய எத்தனை எத்தனை வழிவகை முறைகளை வகுத்துச் சாத்திரங்களாகவும், தோத்திரங்களாகவும், பிற கற்பனைக் கருவிகளாகவும் வழங்கிச் சென்றுள்ளனர். அப்படித் தோற்றுவிக்கப்பட்டவைகளிலே இந்த வேதங்கள் ஆகமங்கள்தாம்மிக மிகச் சிறந்தனவாய்க் கொண்டாடுகின்றனர் அவரவர்களின் வழித்தோன்றல்கள்.
மேற்குறித்த வேதாகமங்களின் அடிப்படை உண்மையை நமது அருட்பெருஞ்ஜோதி எனக் கண்டுகொண்டால்தான் மன்பதை ( மக்களினம்) ஆன்மநேய ஒருமையை உரிமையோடு கொண்டு ஒத்து வாழ்ந்து பெருநலம் காணமுடியும். அடிப்படையுண்மையை அறியாது மயங்கிச் சமயமத போதனைகளால் சிதறுண்டு கிடப்பதும், புலனிச்சைப் பெருக்கால் வெறிகொண்டலைவதும், அறிவியில் விளைவின் ஆடம்பரவாழ்வால் கேடுறுவதும்தான் இன்றைய மனித சமுதாயத்தில் எங்கணும் காண்கின்றோம். அன்பறிவுடைய ஒருசிலர்கூட அக உண்மையை நேரடியாகக் கண்டுகொள்ளாததால், சமரசம், சமத்துவம், அபேதம், எனப்பேசியும், எல்லாம் ஒன்றின் விளைவே என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், எப்பெயரும் ஒரு கடவுளையே சுட்டுவதாயும் கூறிக்கொண்டும் பயன் ஒன்றும் காணாது ஒழிந்து போகின்றனர் பலரும் ஆகையால், உண்மையில் மக்கள் சமுதாயம் ஒன்றுபடவேண்டுமானால், ஆன்மநேயம் பூரணமாய் வெளிப்பட்டு வாழ்வுக்கு உதவவேண்டுமானால் ஒவ்வொருவரும் அடிப்படையான அருட்பெருஞ்ஜோதி என்னும் மூலப்பொருளை உள்ளவாறு கண்டுகொண்டிடவேண்டும்.
அருட்பெருஞ்ஜோதியே உள்ளிருந்து தன் ஏகதேசத்தை ஒவ்வொரு தெய்வத்தின் இயலாக, செயலாக வெளிபடுத்தி வாழ்விக்கின்ற உண்மையை நன்கறிந்து பூரணப் பயன்பெற, பெருந்தயா வாழ்வு மேற்கொள்ள ஆணை செய்யப்படுகின்றோம். நாம் ஒவ்வொருவரும். இதுவரை காணாத வேதாகமங்களின் விளைவு இந்த அருட்பெருஞ்ஜோதி சமூகத்தில் இப்பொழுதுதான் ஏற்படுகின்றது. இதுகொண்டு உலகெலாம் இன்பவாழ்வு பெற்றுய்யும்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment