Vallalar Universal Mission Trust   ramnad......
28.ஆகமசிற்சபை


55. ஏக மனேகம் எனப்பகர் வெளியெனும்

56. ஆமகச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரை விளக்கம்) வேத மெய்ப்பொருளாகிய இறைநிலைப்பேறு எய்த அவ் விறைவனே யாவுமாய்த் தோற்றி விளங்குகின்றார். வேதம் முதல் நூல் என்றால் , ஆகமம் அதற்கு வழிநூலாம். முன்னதை மூலம் என்றும், பின்னதை உரைஎன்றும் கூறுதல் முன்னோர் மரபு.

இறை ஒன்று, ஆன்மாவாம் உயிர் அனந்தம். இறையியல் கொண்டொளிர் ஒரு சொல் ஓம் ஆம். அந்த ஒரு சொல்லால் தோற்றுவிக்கப்பட்ட புறப்பொருள்களே பேருலகுயிர்களெல்லா மாம். இப்பொழுது ஏகம், அனேகம் என்பதன் உண்மை விளங்குவதாம். உள்ளீடாய் இருப்பதன ஒன்றே ஏகம். அதன் வெளிநிலைத்தோற்றம் அகர ஆகாச நிறைவுற்றிலங்கலின் ( அன் + ஏகம்) அனேகம் என்றாகியுள்ளதாம். ஒப்பற்ற தனித் தலைமைப் பெரும்பகுதி ஆகிய கடவுள் ஒருவரே ஆவர். அவர் ஒருவரேயாக இருந்தும் அவரது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ந் தன்மையும், செயலும், தோற்றமும் வெளிப்பட்டு அனுபவத்தில் ஏற்கப்படுவதற்கு இந்த பேருலகக் காரியப்பாடுகள் யாவும் எவ்வளவோ காலமாகத் தோற்றி விளங்கிக் கொண்டிருக்கின்றனவாம். இந்த உண்மை வெளிப்பட்டு விளங்குநிலை பக்குவ மனிதனின் சிற்சபையாம்.

மெய்யறிவு வெளியினின்றுதான் அக்கடவுளரின், ஏகமான அக உண்மையும், அநேகமான புறநிலை விளக்கமும் கண்டு கொள்ளப்படுகின்றன. அந்தப் புறநிலை விளக்கத்தால் அக முணர்ந்து அடையவேண்டியிருக்கின்றது. அதாவது கடவுள்நிலை அனுபவம் பெறுவதற்கு வழிவகை காட்டுவது புறச்சூழலாகும். அகத்தைச் சுட்டுவது வெத மறை, ஆகையால் அதன் புறத்தை விளக்க வந்துள்ளது ஆகமம். வேதம் கடவுளைக் குறிப்பது பதிநூலாகும். ஆகமம் ஆன்ம இயல்பையுணர்த்தி சிற்ப ஆலய வழிபாட்டுமுறையால் பக்குவப்படுத்துவதால் இவ்வாகமம் பசுநூல் எனப்படும். இதற்குமேல் மக்கள் உலகியலை அறவழியில் நலம்பெற நடத்த உதவுவது புராண இதிகாசமாம். இவை பாச நூல் எனப்படும். எனவே ஆகமம் ஆன்மானுபவத்திற்குரிய ஒன்றாய் இருக்கின்றதாம். இவ்வான்மாவின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மல விளக்கம் தர வந்த இந்த உரை நூலுக்கு அம் மும்மல முச்சொற்களின் முதலெழுத்துக்களையே கொண்டு ஆகமம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.

வேதமுடி பொருளாய கடவுளை அடைவதற்கு ஆகமவழியே படிக்கட்டு வழியாக உள்ளதாம். இதுவே சித்தாந்த நெறியாகவும் இருக்கின்றது. நமது சிற்சபையே இந்த வழிகளைன் முடிவிடமாக உள்ளதாம். ஆகவே சிற்சபையைக் கண்டைந்து அருள் விளக்கம் பெற்று நிற்கும்போது, ஆகம உண்மை எல்லாம் உள்ளவாறு தெளிவாம். இவ்வாகமமே சிற்சபை எனக்கொள்ளும் போது அவ்வாரணம் அச் சிற்சபையில் ஒளிர்கடவுள் வண்ணமாகவும் கொள்ளலாம். அது கற்பனைப் புனைவே, நம் சுத்த சன்மார்க்கத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஞான சிற்சபைதான் ஏகமாயுள்ள அருட்பதியியல்பும், அனேகமாயுள்ள அப்பதி ஒளி செய் சூழ்பெருஞ் ஜோதியுண்மையும் கொண்டு திகழ்கின்றதாம். முன் 5வது 6வது, அடிகளில், ஆகம முடிமேல் ஆரண முடிமேல், ஆக நின்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி” எனக் கூறப்பட்டதன் விளக்கத்தை மேலும் இங்கு சிற்சபையில் காட்டு விளக்குகின்றார்.

ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்பது திருவாசகம் குறிப்பது.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt