
53. காரண காரியங் காட்டிடு வெளியெனும்
54. ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) நம் அருட்பெருஞ்ஜோதிபதியையே சுத்த சிவம் என முன்னர் கண்டிருந்தனர். அந்தச் சிவம் பேரருள் விளக்கத்தால் யாவுமாய்த் தோன்றித் தன் அருட்பெருவெளியில் அனுபவப் படலானதாம். அவ்வருளனுபவ நிலையே திரயோதச ( 13) வெளி நிலைகளாக முன் அடிகளில் மொழியப்பட்டனவாம். புற நிலை நின்று கண்ட இப்பதின்மூன்று நிலைகளைப்பற்றிய ஏகதேச விளக்கம் சுத்த சன்மார்க்கத்தால் அக அருள் நிலையில் மெய்யனுபவத்தில் பூரணமாகவே ஏற்படுவதாம். ஆம் புறத்திலிருந்து எவ் வகையிலும் தீண்டறிய அவ்வருட்பெரும் வெளி நிலையை ஆன்ம தற்போதம் நீங்கிய ஒருவனே அப்பதி வண்ணமாய் நின்று அனுபவிக்கக் கூடியவனாய் இருப்பது உண்மையாம்.சான்று;
“ ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும்போது
மையகத்தே பொருந்தாத வள்ளலரு கணைந்(து) என்
மடிபிடித்தார் நானுமவர் அடிபிடித்துக் கொண்டேன்
மெய்யகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின்றாய் நீ
விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என் றெனது
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
கருணையினால் தாயனையார் கண்டாய் என் தோழி”
இதிஒ போத ஒழிவில் தானே அம்பலத்தரசோடுற்று அருள் அனுபவட்த்துடன் வாழ்கின்ற சுத்த சன்மார்க்க உண்மை இதுவெனச் சான்று பகர்கின்றதைக் காண்கின்றாம்.
மேற்படி அருள் வெளியில் திகழ் பரம்பொருளைப் பற்றிப் புறத்திருந்து யூகித்தும் கற்பித்தும், அருள் ஏகதேசத்தால் உணர்த்தப் பெற்றும் ஆதியில் வழங்கப்பெற்றவைகளே தெய்வசாயை கொண்ட வேதாகம சாத்திரமெல்லாம். அவ்வருட்பெரு வெளியிலிருக்கும் அருட்பெருஞ்ஜோதிதான் அந்த வேதமறைக்கு முழு முதற் காரணமாயுள்ளதாம். அப்பதியின் திருச்சந்நிதியில் தூய மனத்தோடு நிற்கும் ஒரு பக்குவிக்கு உணர்த்தப்பெற்ற இறை ரகசியத்தை அவன் வேதவாக்காக விரித்து வெளியிடுகின்றான். மெய்ப்பொருள் அகத்தொளிர் பதியுண்மையே அன்றி வேறல்ல . ஆதலின் அதனை எழுத்தால் எழுத்திக்காட்ட முடியாதாம். செவி வழி உபதேசித்து உள்ளுணர்வில் விளங்கச்செய்யவே முடியும் என்ற கருத்தால் அவ்வேதம் – “ எழுதாக் கிளவி “ எனவும் சுருதி எனவும் சொல்லப்படுகின்றதாம். சுரோத்திரம் என்றால் காது, இக் காதால் கிரகித்துக்கொள்ளப்படுவது , ஓதிப் பயின்று உள்ளத்திற் கொள்ளப்படுவது வேத போதனாமுறை என்பர். இம்முறையிலுள்ள குறைபாடு., சுத்த சன்மார்க்க அருள் அனுபவத்தில் தெளிந்து நிறைவுண்மை ஏற்கப்படும்.
புறத்தே பலரால் பலவாறு தோற்றுவிக்கப்பெற்றுள்ள வேதங்களூக்கும் அவ் வேதங்களின் காரணப் பொருளாயிருக்கின்ற உள்ளொளிர் உண்மைக்கும் நமது அருட்பெருஞ்ஜோதி திகழ் சிற்சபையே ஆதாரமாய் இருக்கின்றது. ஆகவே, வேதத்திற்கு அவ் இறையொளி காரணமாயும், புறவெளியீடுகள் காரியமாயும் உள்ளனவாம். இதனால்தான் நம் அருளம்பலமாம் சிற்சபை “ காரண காரியங் காட்டிடு வெளியெனும் ஆரண சிற்சபை” என அணிந்து கூறப்பட்டுள்ளதாம். புறக்காரியப் பாடான வேதங்கள் அகமெய்ப்பொருளைத்தீண்டா. அவ் வேதங்கள் இன்னும் பரம் அடியைத் தேடிக்கொண்டிருக்கின்றனவாம். வேதம் ஓதியும் விழைவை ( தேகபோக இச்சையை) விட்டிடாப்புற வேதியர் அருட்ஜோதியராகிய உண்மை வேதியனை எங்ஙனம் கண்டடைவர். திருவருட்பூரணத்தால் நம்மை வேதித்து தன்மயப் பொன்னுருவாக்குகின்ற பரிசவேதியனை அருட்பெருஞ்ஜோதியனாக ஆரண சிற்சபையிற் கண்டடையலாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்,
vallalarspace.com/vumt
Write a comment