47. தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
48. அத்திரு அம்பலத் தருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) முன் அடியில் தகரமெய் யெழுத்து நம் ஏழாம் ஞான பூமியில் தோன்றி விளங்கும் பரமாகாசப் பரம்பொருளைக் குறிக்க வந்ததாகக் கண்டோம். அப் பரம்பொருளே தத் என நின்று அது அன்ப் பொருள் ஆகின்றதாம். இவ்விரண்டில் தத் – வடமொழிவழி தகராகாச அரவண்ணப் பதியைச் சுட்டுவதாம். அது ( அ+ த் + உ ) தகராகாசபதியின் அருள் ஐந்தொழில் செயல் உண்மையைத் தமிழ் வழியில் கொண்டு விளங்கும் கடவுள் வண்ணத்தைக் குறிக்கின்றதாம். தத் என்னும் கடவுள் நிலை, இறை பரம்பொருள் உண்மை ஒன்றேயாம். ஒன்றான கடவுள்தன் உண்மையைப் பூரணமாக வெளிப்படுத்த வேண்டி எண்ணற்ற, ஆன்மாக்களாய்த் தோற்றிப் பக்குவத்தேநம்போல் மனிதர் பலராய் விளங்குதல் உண்மையே. பலவாகிய தோற்றத்திற்கு அதீதமாய் இருக்கின்றது அவ் வொன்றான கடவுள் நிலை. அப்படி அதீதமாய் இருக்கும் அதுவே இந்த மனிதப் பிறப்பில் மனிதனாகவே விளங்குகின்றது. ஆகவே அதுவே மனிதன் என்றாம். இவ் வுண்மைவைத்தே “ அது “நீ” அல்லது “ தத்துவம்” என்று உணர்த்தினர் ஆன்றோர், அதீதமாகிய மேனிலையிலுள்ள பரமான்மபதி , ஜீவன்மாவாய் விளங்கவந்தபோது, அம் மேனிலை நின்று கீழே இறங்கி வந்துவிட்டதாகாது; உண்மையில் கடவுள் அதீதநிலையில்தான் எப்பொழுதும் இருந்துகொண்டுள்ளார். ஒரு ஜீவான்ம அணுவில் , அதன் அகத்தேதான் அவ்வான்மபோதத்திற்குச் சிறிதும் அறியப்படாராய் அதீதமாகவே விளங்கிக் கொண்டுள்ளார் என்பது சத்தியம், “ தவமான சத்திய ஞானப் பொதுவில் துவமார் துரியம் சொரூபமதாமே” என்பது திருமந்திர விளக்கம்.
மேற்படி கடவுள் தத்துவம் சத்திய ஞானம் கொண்டிலங்கும் இம் மனிதப் பிறப்பு வடிவில்தான் வெளிப்பட்டு அருளறிவுக்கு அனுபவமாகின்றது. இந் நிலை கொண்ட இம் மனிதப் பிறவி நிறைதத்துவம் கொண்டது என்ப, அந் நிறைத்தத்துவம் தான் ஆன்ம , ஜீவ கரண, இந்திரியமும் புற ஆதார ஐம்பூதப் பிரபஞ்சமும் சேர்ந்து 96 தத்துவங்களாய் விரிந்திலங்குவதாம். புற நிலையில் மனிதன் இத் தொண்ணூற்றாறு தத்துவ வடிவினனாய் இருப்பதும், அக நிலையில் தத்துவாதீதத்தில்தான் பதிமயமாய் இருக்கின்றதும் உண்மையே, ஆகையால் பதி அனுபவங்கொண்டிலங்க வேண்டின் திருவருள் விசேடத்தினச் சத் விசாரஞ் செய்து அகநிலை சிற்றம்பலத்தே யுற்று அருள் வாழ்வு வாழவேண்டியுள்ளதாம். அவ் வாழ்வு பெறவே வள்ளல் வழி காட்டுகின்றார்.
தயாநிதி சரவணானந்தா,
அகவல் உரைவிளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment