
(உரைவிளக்கம்) எங்குமாய் நிறைந்திலங்கும் கடவுட்ஜோதி, சுத்த அருள் ஞானத்திற்கு அல்லாது, பிற எந்த ஒன்றிற்கும் வெளிப்பட்டு விளங்குவதாயில்லையாம், இந்த அருள் ஞானநிலையே சுத்த வேதாந்தமாகப் பகரப்படுகின்றது. இதற்கு முன் யோகாந்த வெளியாகவும் போதாந்தவெளியாகவும்உரைக்கப் பட்டவையும் கூட இந்த அருள் ஞானபீடத்தின் அடிப்படையாய் அடங்கியுள்ளனவாம். யோகாந்தம், ஞானத்தில் ஞாநிலையைப் பதிவடிவாய்க் குறித்தது, போதாந்தம் மலபாசம் ஒழிந்தவிடத்து விளங்கும் நிலையைப் பதிவடிவம் என்றது. இங்கு சுத்தம் என்ற சொல் அருள் உண்மையையுணர்ஹ்த்டி, அவ்வருள் மெய்ஞ்ஞான அனுபவ நிலையையே முடிவு செய்துள்ளதாம்.
அருளுடன் கூடிய சுத்த சத்விசாரத்தால் நமது சிற்சபையினிடத்தே அருட்பெருஞ்ஜோதிபதியைக் கண்டு போற்றிக் கலந்து விளங்குதல் வேண்டும். இவ்விசார அனுபவம்,. சாக்கிரத்தே தொடங்கி, சொப்பனத்தும் தொடர்ந்து, சுழுத்தியில் அசைவற நின்று மேல் துரியத்தில் சொல்லரிய மெய்யருள் உணர்வு மயமாய்த் திகழ்ந்து விளங்குவதாம். இப்படித்தான் சுத்த வேதாந்த வெளியிலே அருட்பெருஞ்ஜோதிபதி அனுபவம் பெறவேண்டி உள்ளதாம். இவ்வருணிலை பெறாது, மருள் தேகப் பற்றோடு கூடிய மனோ, உணர்வு கொண்டு அகத்தே ஆன்மக்கடவுளை எவ்விதத்தும் வெற்றுப்பாவனை செய்தும், நிஷ்டை கூடியும், நிர்விகற்பசமாதி நிலையுற்றும் அடைந்துவிட முடியாது, எனவேதான் பழைய வேதாந்த வித்தகர்கள் “ பிரக்ஞானம்பிரம்மம்” அயம் ஆத்மா பிரம்மம்” “ தத்துவ மசி” அகம்பிரம்மாஸ்மி” என்ற வேதாந்த மகா வாக்கியங்களை நெடுநாட் பயின்றும், பாவித்தும் அந்தப் பிரம்மானுபவத்தோடு வாழாது கடந்து சென்றனராம்.
ஆகவே சுத்த அருள் விசாரத்துடன் இருந்து ஒருமையுற்று உள்ளொளியிற் கூடி நின்று, துரியானுபவம் பெற வேண்டுவது நம் கடமையாகும். அத்துரிய நிலையிலே அமிழந்து கிடந்து விடுவது கடவுளாணை அன்று. அந்தச் சுத்த நிலையிலிருந்து தயவோடு , அத் துரியானுபவம் கெடாது, அக நிலையை விடாது அனகதயா வாழ்வு வாழ்வேண்டும். இவ்வாழ்க்கை நிலையே சகச நிலை எனவும், சாக்கிராதீத நிலை எனவும், சுத்த சன்மார்க்க அனுபவநிலை எனவும் மொழியப்படும். இப்பேரனுபவ நிலையை எய்தவே வேதாந்த பரவெளியில் அருட்ஜோதியைப் போற்றுவோம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment