Vallalar Universal Mission Trust   ramnad......
17. கலாந்த வெளி

33. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்

34. ஆயசிற் சபையில் அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) சுத்த சன்மார்க்க அனுபவ உண்மை எல்லாம் வெளிப்பட்டு விளங்குமிடம் அருட்பெரும் அகவெளியாம். இந்த வெளிநிலை இம்மனித உயிருடம்பின் தலைபாகத்தில்தான் அமைந்திருக்கின்றதாகும். மனோ பகுத்தறிவு சுத்த அருள் உணர்வு மயமாகி அம்மேனிலையிற் பொருந்த்தி நிற்கும் போது அந்த அருட்பெரு வெளியில் படிப்படியாக மேலான அனுபவங்கள் தோன்றி விளங்கும். இவ்வகப்பெரும் அருள் வெளியில் எல்லையற்ற புறப் பெருவெளியின் அமைந்த எண்ணிலி கொடி அண்டங்களின் இரகசியமெல்லாம் வெளிப்பட்டிலங்குவதாம். மேற்படி அகப்பெரும்வெளியே அருள் அனுபவ, திரயோத, சாந்த நிலையாக விளங்குவது, திரயோதசம் என்றால் பதின்மூன்று, ஆகையால், இந்த அருட்பெரும் வெளியை விரித்துக் கூற நேர்ந்தபோது.

1. அருள் வெளி]

2. தனிவெளி

3. சுகோதய வெளி

4. கலாந்த வெளி

5. யோகாந்தவெளி

6. போதாந்தெ வெளி

7. நாதாந்த வெளி

8. வேதாந்த வெளி

9. சித்தாந்த வெளி

10.தரமெய்ஞ்ஞானவெளி

11. தத்துவாதீத வெளி

12. சச்சிதானந்த வெளி

13. சாகாக்கலைவெளி எனப்பதின்மூன்று அனுபவ நிலைகளாகக் குறிக்கப்பட்டிருக்கின்றதாம். இங்கு கலாந்த வெளியைப்பற்றி குறிப்பு வந்துள்ளது. இது நான்காவது நிலையாம். இது முதல் ஒன்பதாவது ஆகிய சித்தாந்த வெளி நிலை முடிய உள்ள ஆறு நிலைகளும் ஷடாந்த நிலை என மொழியப்பாடும்.

ஈண்டு கலாந்த வெளியின் விளக்கத்தைக் காண்போம். கலை என்பது ஏகதேசக் கற்பனையால் தோற்றுவிக்கப்படும் அறிவனுபவச்செயல் விளக்கமாகும். இக்கலைப் பயிற்சியின் பயன் மனிதனுக்குப் பரவசமூட்டி உள்ளூம் புறமும் களிப்புறச் செய்வது மட்டுமன்றி அகவெளியில் கடவுள் ஒளியைத் தோற்றுவித்து வளர்ப்பதாயும் உள்ளதாம். ஆதலின் கலாசத்தியின் புறத்தோற்றத்தைக் கண்டு பெரும் வியப்புற்று மயங்கிப் போதல் கூடாது. தூய்மையான அருட்கலையின் இலட்சியப்பொருளையோர்ந்து , உள்ளுணர்வு கெடாது ஒன்றி நின்று சுத்த சுகானுபவமுறல் வேண்டும். இதுவே தூய கலாந்த நிலையாக இங்கு சுட்டப்படுகின்றதாம். உண்மைக்கலை, உள்மறைந்து கிடக்கும் கடவுள் இயல் தன்மையான ‘ஐ’ யைக் கல்லி வெளியனுபவத்திற்குக் கொண்டு வரும் செயலேயாகும். இதுவே ( கல் + ) கலை என வழங்கப்பட்டுள்ளதாம். இத் தூய கலாந்த்தத்தால்பெறப்படும் மெய் இன்பமே பெருஞ்சுகானந்த வாழ்வாகும். இது வெளிப்பட்டு இலங்கும் வெளியிடம் நமது சத்விசார மெய்ஞ்ஞானத்தால் ஆய்ந்து கொள்ளப்படுகின்ற ஆன்ம சிற்சபையாகும். இந்த சிற்றம்பலத்தில் ஒளிர்கின்ற அருட்பெருஞ்ஜோதியே நமக்கு இக் கலாந்த வெளிச் சுகானுபவத்தை வழங்குவதாகும்.

தயாநிதி சரவணானந்தா, அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt