16.சுத்த மெய்ஞ்ஞான சுகவெளி
31. சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி யெனும்
32. அத்துவிதச்சபை அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) அகண்ட பிரபஞ்சவெளி அளவிடற்கரியதாய்ப் புறத்தே சூழ்ந்துள்ளது. அந்தப் பெருவெளியின் உண்மை விளக்கத்தை உள்ளவாறு அறிய வேண்டுமானால், நமது அகமாகிய ஆன்மாகாச அருட்பெருவெளியில் இருந்து, சுத்த மெய்யறிவால்தான் காணவேண்டும். இந்த அகவெளியே சுத்த சன்மார்க்கத் தனிவெளி எனவும், சுகவெளி எனவும், முன் குறிக்கப்பட்டது. இவ்வெளியில் தான் வளரொளியாக நம் அருட்பெருஞ்ஜோதியின் அனுபவம் வெளிப்பட உள்ளதாம். இது சுத்த சன்மார்க்கம் தோற்றமிடமாம். ஆகப் பெருவெளியெலாம் நிரம்பி நித்தியமாய் விளங்கும் கடவுளை, அதன் உண்மை விளக்கம் அறியப்படுகின்ற இந்த அக வெளியில் நின்று அனுபவ பூர்வமாக அடைய வேண்டியிருக்கின்றதாம்.
புறத்திருந்து சென்று ஒடுங்கிப் போகும் பழைய சன்மார்க்கங்கள் போன்றல்லாது மெய்ஞ்ஞான விசாரத்தால் சுத்த மெய்ஞ்ஞான நிலையத்திருந்து அல்லது சத்திய ஞான சபையிலிருந்து வாழச்செய்வது இந்த சுத்த சன்மார்க்கம். திரு அம்பலவன் திருநோக்கம் பெற்றர்க்கு உரு அம்பலத்தே என்று உணர்த்தப் பெறுகின்றோம். இந்த அம்பலவாணன், அம்பல அன்பன் தான் அருளின்பானுபவத்தை அறிந்து சுகோதய வெளியாக உரைக்கப்பெறுகின்றது.
அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்கு
அனுபவமாவது என்னடி தாயே
தெருளாலே மருளாலெ தெரியாது தெரியும்
திருவடி இன்பமென்றறியடி மகளே
என்றபாவிளக்கத்தால் தெளிவுறும் உண்மை இதுவாகும். அருட்பெருஞ்ஜோதி ஆனந்தபதி இந்த அகவெளியில் அருள் ஞானத்தால் அறியப்பட அறியப்பட உள்ளிருந்து , இது வரை அனுபவித்தறியாத பேரின்பம் வெளியாகிப் பெருகுகின்றதாம். இதனால் இந்த அருள்வெளி சுகோதயவெளி என்பது உண்மையே.
அருட்பெருஞ்ஜோதியோ உதயாத்தமமனமின்றி தோன்றுதலும் மறைதலும் இல்லாது எக்காலும் அக சுத்த ஞானாகாச வெளியில் திகழ்ந்து நின்று பேரின்பமாய் விளங்குகின்றது. இப்படியுள்ள பதியே தான் இந்த அருளின்பானுபவம் வெளிப்படக் கொண்டு உலக வாழ்வில் விளங்கற்கு வேண்டி, இந்த மெய்ஞ்ஞான மனிதவடிவினனாகத் தோன்றியுள்ளதாம். அந்த அருட்பதியும் இந்த மெய்ஞ்ஞானியும் வேறல்ல ஒருவரே என்பது உண்மை. இவ்வுண்மைதான் அக ஆன்ம சிற்றணுவில் , அத்துவித சிற்சபையில் அனுபவப்படுகின்ற அருட்பெருஞ்ஜோதியாம். இந்த மெய்ஞ்ஞானி எந்த அளவுக்கு உடற்பற்று நீங்கி, அருள் அனுபவம் பெறுகின்றானோ, அந்த அளவுக்கு சுக வாழ்வில் ஓங்குகின்றவனாவான். பூரண் நிலையில் சுகத்தின் உச்ச முற்றவனாய், சுத்த சுகானந்த வடிவினனாய் என்றும் திகழ்வான். முக்கியக் குறிப்பு, அகண்டமானது, கடவுள் பேருருவம் அகண்டத்தில் ஒரு சிற்றணுவைத் தன் சிற்றுருவாய் கொண்டு அதில் தன் சச்சிதானந்த அனுபவத்தை ஏற்றுள்ளது. கடவுள் மனிதனின் அல்லது சுத்தசன்மார்க்கியின் நிலையாம். அணுந்துவமாகிய கடவுள் சித்துரு அல்லது சிற்றுருதான் சிற்றம்பலம், சிற்சபை, ஆன்ம அணு எனப்படுகின்றதாம். இந்தச் சிற்றுருவைச் சூழ உள்ள இறைபேருண்மை தான் பேரம்பலம் பொன்னம்பலம்,
எனவும் கூறப்படுகின்றது.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரை விளக்கம்.
vallalarspace.com/vumt
Write a comment