Vallalar Universal Mission Trust   ramnad......
16. சுத்த சன்மார்க்க வெளி அகவல் உரைவிளக்கம்

16. சுத்த சன்மார்க்க வெளி

29. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

30. அத்தகை சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) மேளி குறிக்கப்பட்ட தனிவெளியேதான் இங்கு சுத்த சன்மார்க்க வெளியாகப் பேசப்படுகின்றது. அந்த வெளிநிலை அருட்பெருஞ்ஜோதி கொண்ட ஆன்மசிற்சபையேயெனத் தெளிவு செய்யப்படுகின்றது. இங்கிருந்துதான் சுத்ஹ்ட சன்மார்க்கமாம் பெருநெறி திறக்கப்படுகின்றது. மற்றெல்லா உலகச் சமய மத நெறிகள் யாவும் வேறு வேறு வெளிநிலைகளிலிருந்து ஆக்கப்பட்டிருக்கின்றனவாம். உலகநெறிகள் தோன்றிய வெளிகள் யாவை எனில், இந்திரிய வெளி, கரணவெளி, ஜீவவெளி, ஆன்மவெளியாம், இவற்றுள் ஜீவ ஆன்மவெளி நின்று தோன்றியவை அகச் சமயமாகிய சைவம் வைணவம் முதலியனவாம். இந்திரிய கரண வெளிகளினின்று தோற்றுவிக்கப்பட்டவைகளே புறச்சமயங்கள் யாவுமெனலாம். பின்னுற்ற சிலர், தம் அகச்சமய உண்மையைப் போற்றிக் கொண்டு, இதினின்று ஓரளவைத் தமது நெறியில் ஏற்றிக்கொண்டுள்ளனராம். இந்த உண்மைகள் எல்லாம் இன்றைய மக்கள் சமுதாயத்திற்கு விளங்குகின்றன. இல்லை. அப்படி உண்மை அறியவேண்டுமானால், ஒவ்வொருவரும் சுத்தசன்மார்க்க நிலைக்கு ஏறிவர வேண்டும். இவறாத’ (உலோபத்தன்மையற்ற., தயவுத்தன்மை நிறைந்த) சுத்த சிவ சன்மார்க்கத்தில்தான் எல்லா உண்மையும் உள்ளவாறு விளங்கும். அவ்வுண்மை கொண்டு உலவாஇன்ப வாழ்வு பெறலாம்.

நம் ஆன்ம வெளிநிலைக்கு மேல் அருட்பெரு வெளி விளங்குகின்றது. அகச் சமயநெறியின் அந்தத்திலுள்ள இவ் அருள்வெளியைப் புறத்திருந்து பாவித்தவர்களுக்கு அந்நிலை கிட்டவில்லை. அவர்கள் ஐயமுற்று புறநின்று ஒழிந்தார்கள். அந்நெறிகளுக்கு முற்றிலும் வேறானது நமது சுத்தசன்மார்க்கம். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தான் பலரும் இதனை ( சுத்த சன்மார்க்கத்தை) அவற்றோடு ( பிற நெறிகளோடு) வைத்து மதிப்பிட்டும், ஒப்பிட்டும் பழமையின் விளைவு தான் இது வென்றும், சிறந்த அப்பழநெறிகளைக் கைவிட்டு இப்புதுநெறியை மேற்கொள்ளுவதால், சமய மதங்களே அழிந்து , மக்களினமே கெட்டு ஒழிந்து போகும் என்றெல்லாம் கூச்சலிடுகின்றார்கள் அப்பழமை விரும்பிகள் உண்மையில் இவர்கள் தம் கொள்கைகளை கைவிடுவது , தாம் மேற்கொண்டிருந்தது மூடமென்றாகிவிடும் என்றும் தம் கெளரவம் போய்விடுமென்றும், தமது பிழைப்புக்கே ஆபத்து நேர்ந்துவிடும் என்றும்தான் இப்போது இப்போது, நெறியைக் காணவு அஞ்சுகின்றார்கள்! அவ்வளவும் அறியாமையேயாம் . நம் நெறியால் எல்லோருக்கும் , பெருநலம் உண்டாவது நிச்சயம். பழையவற்றின் முடிந்த லட்சியங்களும், அவற்றிற்கெல்லாம் மேலான பேரின்ப லட்சிய வாழ்வும் சித்திப்பது திண்ணம். ஆகையால் எல்லோரும் இந்தச் சுத்த அருட்பொது நெறியைக் கைக்கொண்டு உய்யலாம் ஆகவே ஈண்டு இச்சுத்த சன்மார்க்கத்தி நன்கு புரிந்து ஏற்றுக் கொள்வோமாக.

எங்கும் பரிபூரணமாய் என்றும் திகழ்ந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதியாய் விளங்குகின்ற ஆண்டவரை மெய்யருள் அறிவாலே நமது ஆன்ம சிற்சபையில் தான் காணவேண்டியிருக்கின்றது. பிற எவ்விடத்தும். எக்காலத்தும், எதனாலும் எல்லாம் வல்லபதியைக் கண்டு கொள்ளவே முடியாது. ஆகையால் தயவோடு சத்விசார வசத்தராய், ஒருமை மனத்தால், புருவ நடுவு புகுந்து சிற்சபையை அடைந்து அதுவாகி நிற்கப்பழகுதல் வேண்டும். புல நெறியில் மனயங்கி புறத்துழலும் மக்களுக்கு இது கடினமாக இருக்கலாம்.

என்றாலும், தயாநன் முயற்சி செய்யின் திருவருளே முன் நின்று கூட்டிவைக்கும், இவ்வக அம்பலத்தே பொருந்தி நின்று புறவாழ்வில் விருப்பு வெறுப்பின்றி, சூழ் உலகில் ஜீவ விளக்க ஞான விளக்கப்பணி புரிந்து கொண்டு சுத்த இன்பானுபவத்தில் திகழ்வதே இந்நெறியின் குறிக்கோளாம். இதுதான் சுத்த சன்மார்க்க இயல் என்றும், அனகநெறிமுறை என்றும் தெளிதன் வேண்டும் இதனால் உலகில் அருள் ஒளியின் கீழ் மக்கள் சமுதாயம் முழுமையும் நல்லின்ப வாழ்வில் தழைத்தோங்கும்.

தயாநிதி சரவணாந்தா

அகவல் உரைவிளக்கம்.

தொடரும்.,