Vallalar Universal Mission Trust   ramnad......
‘ எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்” எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே” என்று கேட்கின்றார் நமது ஞானசித்தர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளல்.

எட்டு இரண்டு முதற்படி

எட்டிரெண்டென்பன இயலுமுற்படியென

அட்டநின்றருளிய அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) எட்டும் இரண்டும் எண்ணிக்கையாக அல்லது எண்ணாக இருப்பது எவரும் அறிந்ததே. ஆனால் மெய்ஞ்ஞான அனுபவத்தில் இவற்றின் உண்மையும் விளக்கமும் பற்றி ஒரு சிலரே அறிவர்; அதுவும் ஒருவர் எந்த அளவுக்கு அருள் உணர்வு பெற்றுள்ளாரோ அந்த அளவுக்கு உண்மை விளங்குவதாயிருக்கிறதாம். இங்கு , எட்டும் இரண்டும் இயலு முற்படியாயுள்ள தெனக் குறிக்கப்படுகின்றது. இயலு முற்படி என்றால், ( அருளியல் ) அக அனுபவத்திற்கு ஆதாரமாய், முதல் நிலையாய் உள்ளதென்பதாம். இவ்வுண்மையை நம் வள்ளலார்க்கு அருட்பெருஞ்ஜோதியே அருளியதாம். அதுவும் அட்டநின்று அருளியது எனப்படுகின்றது. அட்டம் என்பது மேலான, மனோவாக்குக்கு எட்டாத சுத்த அருட்ஜோதி நிலையினின்று திருவருளால் உணர்த்தப்பட்டது என்பதாம். அருளால் உணர்த்தப்பட்ட, எட்டும் இரண்டும் என்பதன் உண்மையை நாமும் அறிய வேண்டியுள்ளது. அதற்குத் திருவருல் துணையை வேண்டுவோம். அதுவே உணர்த்துகின்ற உண்மை இதுவாம்., எட்டு அகரமாய், ஆகாச நிலையை , பரமாகாச சொரூபியாகிய கடவுள் வடிவாய் எங்கும் நிறைந்ததாய் உள்ளதாம். இரண்டு உகரமாய், வான்வெளி நிரம்பிய காற்றின் கூறாய் கடவுளின் சத்தியாகிய அருள் ஆற்றலாய் இருந்து யாவுமாய், விளங்குகின்றதாம். எட்டு புறப்பொருள் எல்லாமாய் உருவகித் தோன்ற இரண்டு , அகநின்ற ஆற்றலாய் இருந்து செயல் படுத்துகின்றதாம். இது அணுமுதல் , அண்ட வடிவுகளிலும் , சிறிய உயிரி ( அணுஜீவன்) முதல் பரமஞானியின் அக உணர்வு வரையிலும் , அகர உகர உண்மை கொண்டே விளங்குக்கின்றனவாம். உண்மையுணர் நிறைமனிதனில், அகரம் எண் சாண் உடலாயிருக்க , உகரம் ஈருயிர்ச் செயலாய், விளங்குகின்றதாம். அக அனுபவத்தில் , எட்டும் இரண்டும் இலிங்கமதாமே” என்பது கொண்டு , இந்த எட்டும் இரண்டும் சேர்ந்த பத்து ஆகி நம் கடவுள் ஆன்மவடிவாய்த்திகழ்வதாம். கடவுள், எட்டாகிய அகரவடிவமாய் இருக்க, மனிதனின் ஆன்மத்தன்மையாம் உணர்வு இரண்டாகிய உயிர் உணர்வாய், அவ்வகரததோடு கூடிப் பிரிவற வுள்ளதாம். இதனால் இரண்டே கடவுளின் அருட்சக்தியாகிய, நம் உணர்வாய் இருந்து, அக்கடவுளையே உணர்கின்றதாம். இந்த ஆன்ம கடவுளோடு இரண்டற இருந்தாலும், தான் அருள்ஞான உணர்வு பெறாதவரை , பொறியுடம்புணர்வுகொண்டு இருக்கும் வரை , தன்னை கடவுளுக்கு அன்னியமாகவே கண்டு உழன்று கொண்டிருப்பதாம். தேகப் பற்றற்று உள்ளொளி மயமாகி நிற்கும்போதுதான் உண்மை அனுபவம் பெறுகின்றான் மனிதன் , இந்த அபக்குவிகளைக் குறித்தே, எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்” எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே” என்று கேட்கின்றார் நமது ஞானசித்தர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளல்.

மேற்படி எட்டும் இரண்டும் தான் உலகமெல்லாம் உயிரெல்லாம் தோற்றுவிக்கப்படவும், விளக்கம் செய்யப்படவும், முடிவில் அருளனுபவ அற்புத்தச் சித்திகொண்டு வாழ்வும், அடிப்படையான காரண காரியமாய் இருக்கின்றனவாம். இந்த ஆதாரத்தின் பேரில் பிரபஞ்ச காரியப்பாடு நடந்துகொண்டுள்ளது. அகரமாகிய அணு, உகர அகச் சிற்றசைவினால் ( மின் காந்த விசையால்) விளங்கி நின்று , எவ்வளவோ காலத்திற்குப் பின் அவ்வகச் சக்தி உயிர்ச்சக்தியாகி வெளியுறும் தருணம், சூழ்நிலையை ஒரு புல்லாதி உயிரின வடிவாய் ஆக்கிக்கொண்டு விளங்குவதாம். அவ்வுயிர் வடிவில் அகச்சக்தியே புலன் உணர்வாய் இருந்து பெருகி , மனிதப் பிறப்பில் ஐம்புலன் உணர்வுக்கு மேல் ஆறாவதான மனோ அறிவாய்த் திகழ்கின்றதாம். மேலும், பக்குவ மனிதனில் மனமும் , சகல கேவலமற்ற சுத்தநிலையில் அருள்ஞானமாக விளங்குகின்றதாம். இந்த அருள் ஞானத்தாலேதான் அகமெய்ப்பொருளாம் கடவுள் உண்மையை அறிந்து அனுபவத்திற் கொள்ள முடிவதாம். இந்த அருள் அனுபவம்தான் அருட்பெருஞ்ஜோதியா பெறப்படுவது. மற்று கீழான அனுபவம் பெறுவிக்கச் செய்யும் விளக்கமும் பொருளும் கொள்ளற்பாலன அல்லவாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt