Vallalar Universal Mission Trust   ramnad......
11.ஒன்று இரண்டு அன்றெனல்

21. ஒன்றென இரண்டென ஒன்றிரெண்டன விவை

21. அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி

(உரைவிளக்கம்) உள்ளத்தில் அருள் ஒளியைக் கொண்டு கொள்ளுகின்ற போது, எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உள்ளது உள்ளபடி காணமுடிகின்றதாம். அவ்வுள்ளொளியைக் காணாது மருளறிவாகிய மங்கொளியில் கடவுள் உண்மையைப் பற்றி அறிந்து கொண்டிருந்ததெல்லாம் திரிசியக் காட்சியே என்பது இன்று தெளிவாகின்றது. முன்னர், கடவுள் ஒன்றே உண்மையில் உள்ளதென்றும் , ஏகம் சத் என்றும் , அதுவன்றிப் பிரிது எதுவும் உண்மையில் இல்லை எனவும், பிரிதாகத் தோற்றும் அவை பொய் மாயா தோற்றனே எனவும் கூறினர். அடுத்து, சத்தாம் பரம்பொருள் ஒன்றே உண்மையில் இருக்கின்றது என்பது சரியன்று; அப்படியுள்ள அப்பரம் பொருளை அறிகின்றா ஒருவனாம் ஓர் ஆன்மாவும் இருந்துதான் இந்த உண்மையைக் காண்கின்றதால், அந்தப் பரமான்மாவும் இந்த ஜீவான்மாவும் ஆகிய இரண்டும் இருத்தலே உண்மை என்றனர். பின்னர் உண்மையானது எப்போதும் ஒன்றாகவே, அதற்கு ஒப்புவமையான பிறிதொன்றும் எக்காலும் இல்லாததாகவே இருக்க வேண்டும்; ஆகையால் இரு தனிப்பொருளாக இருத்தல் முடியாது ஆனால், கடவுளும் மனிதனும் இரண்டற்ற ஒன்றாய், அத்துவிதமாய் இருக்கின்றதுதான் . உண்மையாம். இவ்வத்துவித உண்மையை குறிக்கவே ஒன்றிரண்டு என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாம். ஒன்று என்ற சொல்லே ஒன்றி இணைந்து இருத்தலையே சுட்டுவதாம். சங்கரநாராயணன், உமையொருபாகன் என்பவை ஒருவடிவில் இரு தெய்வ இயல் உண்மையைக் காண்பது கொண்டு இந்த ஒன்றிரண்டு என்ற குறிப்புச் சொல் வழங்கப்பட்டுள்ளதாம். ஆகவே, கடவுளை ஒன்றாகவும், இரண்டாகவும் ஒன்றிரண்டாகவும் படிப்படியாகக் கண்டு தேறின நிலையில் இருந்து வந்த நமக்கு, இதற்கும் மேலான பேருண்மையை நேருறக் காட்டிக் கூட்டி வைகின்றார்.

நம் இறை காட்டிக் கொடுக்கின்ற அதீத உண்மை யாதெனில். அருட்பெருஞ்ஜோதியேயாம். இந்த அருட்பெருஞ்ஜோதிக்காட்சியால் தெரியப்படுகின்ற உண்மை விளக்கம் இதுவாகும். அகண்ட வெளி நிறை இயற்கையுண்மைப் பேரொளி நிலையே கடவுளரின் பேருருவாகும். இவ்விறையொளியின் அருள் இயல் உண்மை வெளிப்பட்டு விளங்கும் சிற்றணுவே நித்திய ஆன்மாவாம். இந்த ஆன்ம அணுவேதான் அனாதி நித்திய மனிதனின் இயற்கை நிலையாம். ஆகவே ஒன்றான அருட்பெருஞ்ஜோதிக் கடவுளைத் தவிர வேறாக மனிதன் இல்லையாம். இது அந்த அருட்பெருஞ்ஜோதி நிலை என்று உணரும்போதுதான் உண்மையாய் விளங்குகின்றது. மற்றபடி அகம் பொருந்தாது. புறமிருந்து உள்நோக்கியவரைதான், கடவுள் ஒன்றாகவும், இரண்டாகவும், ஒன்றிரண்டாகவும் தோற்ரி மறைகின்றதாம். மனிதன் தன்னைத் தேக வடிவினனாகக் கருதியிருந்தபோதும், சற்று பக்குவமுற்று தன்னை ஆன்ம வடிவினனாகப் பாவித்திருந்தபோதும், தான் வேறு கடவுள் வேறு என எண்ணி வந்தான். அப்போது கடவுளை அடைவதற்கு ஏற்படுத்தின மார்க்கங்கள் எல்லாம் புறத்தனவேயாம். யோக ஞானியரும், ஜீவான்ம பரமான்ம அத்துவிதானுபவ முறப் புறத்திருந்து உட்பொருந்தி சமாதி கூடி உடலை விட்டு ஒழிந்தே போயினர். இது சமயம் தான் மனிதன் அக நின்று அருட்பெருஞ்ஜோதி வண்ணமாக இருக்கும் தனது இயல் உண்மையை உணர்ந்து அருள் நிறை அனக வாழ்வால் நித்தியமாய் விளங்கக்கூடியவனாகின்றான். இந்த அனக அருள் நெறிதான் நம் வள்ளல் கண்ட சுத்த சன்மார்க்கம், இவ் இறையுண்மை வழங்கி வாழ்விக்கும் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றுவோம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

தொடரும்……

vallalarspace.com/vumt