15. எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
16. அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) அருள் உண்மையைக் கண்டடைந்து , ஆனந்த வாழ்வு பெறவேமனிதனுக்கு இறையாணை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மை அறியப்படாதவரை, உயிருக்கு இந்த மெய்ஞ்ஞானம் விளங்காதவரை பிறவிச்சூழல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றதாம். ஒவ்வொரு பிறவியிலும் உயிருக்குப் பலப்பலவாகிய துன்பங்கள் நேர்ந்து , அறிவு விளக்கமும், அனுபவமும் சிறிது சிறிதாக விளைகின்றன. ஓர் உயிருக்கு ஏற்படுகின்ற பிறவி இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்லிவிட முடியாது. இதனால் இந்தப் பிறவியைப் பெருங்கடலுக்கு ஒப்பிடுகின்றனர். கடல் பெரிதாகத் தோன்றலாம்.நடுக்கடலில் இருப்பவருக்குக் கரையே தென்படுவதில்லைதான் எனினும் அக்கடலுக்கு ஒரு கரையிருக்கும் என்பதும் , அக்கரையேறி வாழ்வுறலாம் என்பதும் மனிதனின் எண்ணம், ஆனால் இந்தப் பிறவிக்கடல் இருக்கிறதே இதற்கு எல்லையே இல்லை! கரையே இல்லை என்பது இங்கு குறிக்கப்படுகின்றாது. அப்படியானால் இந்த எல்லையில்லாத பிறவிப் பெருங்கடலிலிருந்து மீள்வது எப்படி?
“ பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.”
என்பது வள்ளுவர் கண்டதும் முன்னோர் முடிவுமாம். இறைவன் திருவடியை அறிந்து பற்றிக்கொண்டுவிட்டால் போதும், அதுவே ஒருவனுக்குப் பிறவாத பிறவிக்கடலைக் கடந்த பெருநிலையாம் என்பது கருத்து, இப்படி இறைநிலையுற்று, மேல் பிறவாமையெய்தி விடுவதால் ஒருவன் பிறவிக் கடலை கடந்துவிட்டான் என்றால், அவனுக்கு இந்த இறையனுபவம் விளங்கும் மனிதவுடல் இல்லையாகிவிடுகின்றது. ஆகையால் கடவுளின்பானுபவத்திற்கு வழியில்லாது, உலகில் வாழ்வற்றுப் போய்விடுவதுதான் இப்பிறவியைப் பெற்றதின் பயனோ? ஓர் ஆன்மாவுக்கு இந்த இறை ஞானாஞ்பவ தேகம் வருமுன்னும், தேகநீக்கத்தின் பின்னும் இருக்கும் நிலை எதுவோ அதுவே நீடிக்கின்றது உண்மையாம் ஆகையால் பிறவா நிலையை அடைந்துவிட்டதால் ஏதோ கடவுள் நிலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளுதல் பொருந்தாது. அப்படிப் பிறவாநிலையில் எவ்வளவு காலம் அருக்கிக்கிடந்தும் பேரின்பப்பயன் விளங்காது. ஆகையால் அப்பெரும்பயன் உண்டாக மறுபடியும் அவ் ஆன்மாவுக்கு மனிதப்பிறப்பு வழங்கப் படவேண்டியது அவசியமாம், இறைவனும் அந்தப் பக்குவ ஆன்மாவுக்கு உரிய காலத்தே மனிதப் பிறப்பு தேகம் வழங்கி விடுவது உண்மை,. எனவே, பிறவாநிலை பிறவிக்கடலை கடந்து விட்டதாகாது. அது பிறவிக் கடலின் எல்லை, அல்லது கரையாகக் கொள்ளமுடியாது. நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையோடு என்றென்றும் விளங்குகின்றவராவர். அவரது எல்லையற்ற கருணையின் ஐந்தொழில் எப்பொழுதும் விளங்கிக்கொண்டே யிருப்பது. அப்பெருங்கருணையின் தோற்றமே இத்தேகாதி பிரபஞ்சக் காரியப்பாடுகள் யாவுமாம். இந்த இறையருட் பிரபஞ்சத்தத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள மனிதப் பிறவியில்தான் கடவுள் உண்மை விளக்கம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நித்தியமான அருட்பெருங்கடவுளே, ஓர் ஆன்ம சிற்றணுவினின்று இவ்வுண்மை விளக்க அறிவு கொண்டு மனிதனாய்க் தோற்றி நின்று உணர்கின்றதாம். இதுவே மனிதனின் உண்மையான, இயற்கையான, கடவுள் நிலையாயுள்ளது ஆதலின் இவனதுபிறவிச்சூழல், அக்கடவுள் நிலையில் அருள் ஐந்தொழில் நிலைக்களனாகவே யுள்ளதாம். இவ்வுண்மை கொண்டு அக நின்று அருள் வாழ்கின்றவனே என்றும் மறையாது, இறவாது, மேற்பிறாவாது, தன்னை உடல் அடிவினனாகக் கருதி அல்லல் பிறவியை யொழிக்க முயன்று புறத்தே அலையுறுவதாலும் , அகத்தே அடங்கியொடுங்குவதாலும், பிறவாமைஎய்தினாலும் கூடப் பயனின்றாம்.
கடவுளான்ம உண்மையுடன் விளங்குகின்ற மனிதன் அகத்தே அல்லலில்லா ஆனந்தபதி நிறை தேக வாழ்விலும் உழல்கின்றான். இவன் தேக வாழ்வில் விருப்பு வெறுப்பு கொண்டு அவத்தைப்படுகின்றதை விட்டு, அகமிருந்து அருள் வாழ்வு வாழ்த் தொடங்கினால் அந்த அருளே இவனைச் சுத்த உடம்பு கொண்டு சுகானந்தமோடு விளங்கச் செய்து விடுவதாம். இதனால் அல்லல் பிறவி முற்றும் ஒழிந்து போகின்றது. இவனைச் சூழ்ந்திலங்கௌம் எல்லையில்லாத பிறவிப் பெருங்கடல் , முடிவில்லாத அருள் ஐந்தொழில் விளங்கிக் கொண்டேயிருக்கும் எல்லையற்ற ஆனந்த சாகரமாக விளங்குவதாம். இந்த எல்லையற்ற அருட் பெருங்கடலுக்குக் கங்குகரை இல்லை என்பது உண்மையே! இதில் வாழ வந்த சுத்த சன்மார்க்கியை அருள் அம்பலமாகிய தீண்டதரிய வெளிநிலைக்குத்தூக்கி கொண்டு, என்றென்றும் தன்மயமாய் வாழச்செய்துவிட்டா நம்பதி. இந்தநிறை இன்ப இறைநிலையே பிறவிப் பெருங்கடல் கடந்த பெருநிலையாம் . நம் திருவருட்பிரகாச வள்ளலுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தனிப்பெருங்கருணையால் , எல்லையில் இருங்கடல் அல்லது பெருங்கடல் நிலையைக் கடத்திவிட்டு, அல்லல் செய் பிறாவியை நீக்கிவிட்டு ஆனந்த நிலையில் ஏற்றி வைத்துள்ளார் என்பதை உலகுக்கு உணர்த்துவன இவ் அகவல் அடிகள்.
அகவல் உரைவிளக்கம்
சுவாமி சரவணானந்தா
vallalarspace.com/vumt
Write a comment