Vallalar Universal Mission Trust   ramnad......
7. ஊக்கம் முதலியன அருள்வது

13. ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

14. ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

(உரை விளக்கம்) மனிதன் உயிரும் உடம்பும் கொண்டு விளங்குகின்றான். பரு உடல் புறத்தே திகழ்கின்றதைக் காண்கின்றோம். இப்புற வடிவுக்கு ஆதாரமாக , அகத்தே நுண்ணிய ஆற்றல் வண்ணமாய் இருந்து செயல்படுத்திக் கொண்டு மனிதனை இலங்கச் செய்து கொண்டுள்ளது உயிராகும். இந்த அகவுயிருக்கும் புற உடலுக்கும் உதவியாயிருந்து அருள்கின்றது நம் அருட்பெருஞ்ஜோதியே ஆம்.

அகத்தில் உயிர் சக்தி நன்கு விளங்கும்போது உள்ளத்தில் ஊக்கம் அல்லது தைரியம் அதிகமாக இருக்கும். இதனால் மனோகரணத்திலும் திட ஆற்றல் திகழும். இந்த ஊக்கமும் உணர்ச்சியும் கொண்டு புறவாழ்வு சிறப்புற அமைவதாம். இத்தேகம் பூத முதலிய தத்துவங்களால் ஆக்கப்பட்டது. நாடி நரம்பாகிய ஆக்கையினால் பிணைக்கப்பட்டது. ஆகையால் ஆக்கை எனப்படுவதாம். இவ் ஆக்கை இளமையும் வலிவும், பொலிவும் கொண்டு விளங்கும்போது போற்றப்படுகின்றது. ஆனால் இந்த இளமையும் வனப்பும் நிலையாவெனக் கண்டு இழிவுரை கூறித் தூற்றினர் துறவறத்தார். சுத்த சன்மார்க்கத்தில் பயிலும் நாமோ இத்தேகத்தை அருள் ஒளியுருவாக மாற்றிடப்பெற்று , ஆக்கத்தோடு நல்ல செயல் திறனோடு , அருட்சித்தாம், அழியாச் செல்வத்துடன் வாழும்படி ஆணை செய்யப்பட்டுள்ளோம். இவ்வுண்மையைத்தான் நம் வள்ளற்பெருமான் தம் அனுபவத்திற் கண்டடைந்துதான் ஊக்கமும், உணர்ச்சியும் , ஒளி தரும் ஆக்கையும், ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி என வழுத்தியுள்ளார்.

அகவல் உரை விளக்கம்

சுவாமி சரவணானந்தா

தொடரும்...

vallalarspace.com/vumt