11. உரைமனங் கடந்த ஒரு பெரு வெளிமேல்
12. அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) அகண்டமாயுள்ள, உலகெல்லாம் அடங்கிய, பெரு வெளியிடமே கடவுளரின் நிறையியல் செயல்படுகின்ற நிலையமாகும். அக்கடவுட் பெருவெளியின் எல்லை இவ்வளவு அவ்வளவு என்று எவராலும், எக்காலும் கணக்கிட்டுக் கூறமுடியாதாம். இந்தப் பிரபஞ்ச வெளியைப்பற்றி மனிதன், கண்ணாலும், அறிவியற்கருவிகளாலும் காண்கின்றது மிகச் சிற்றளவினதேயாம். இக்கருவி கரணக் காட்சியைவிட ஜீவமனோகரணக் காட்சியால் காணும் வெளியிடம் பெரிதாகும். இதற்கு மேல் மனோபகுத்தறிவு எல்லைக்கு அப்பால்தான் மனதுக்கு எவ்வாற்றாலும் விஷயமாகாத நமது பிரபஞ்ச வெளி போன்று அனந்தவெளி அடங்கிய பெருவெளியிருக்கின்றது. இதன் இருப்பைக் கற்பனை செய்து பாவிப்பதன்று, திருவருள் உணர்வால் உண்மையாகவே உணர்தலாகும். இந்த அருளுண்மை விளங்கும் அளப்பரும் நிலையே கடவுளரின் நிறைநிலையாக இருக்கின்றதாம்.
அண்டகோடிகள் எல்லாம் விளங்குகின்ற அகண்ட வெளியைப் பற்றி மெய்யருள் உணர்வால் உணர முடிவதேயன்றி மனவறிவால் அறிந்துகொள்ள முடியாதாம். ஆதலின் அந்தப் பெருவெளிநிலையை ஒரு, ஒப்பற்ற அருட்பெருவெளியாகக் குறிக்கப் படுகின்றது. இந்த அருட்பெரு நிலையை நமது ஆன்ம அகத்தினின்று காண வேண்டியிருக்கின்றது. அன்பு நிறைந்து, அருள்மயமாகி அகநின்று அருளால் உணரும் அப்பெருவெளிநிலை மன வாக்கிற்குச் சற்றும் எட்டாததாகும். இவ்வருள் வெளிநிலையில் பரிபூரணமாய் இருந்து கொண்டு புற உலகுயிர் அனைத்தையும் ஆண்டு அருள்கின்றவர் நம் அருளம்ப்பலதரசர். இந்த அருளம்பல மன்னிய மாமன்னர், எந்த ஓர் ஆன்மாவின்கண் வெளிப்பட்டு அருளாலே கண்டு கொள்ளப்படுகின்றாரோ, அந்த சிற்றம்பலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றதோடு, சூழுற்றிலங்கும் பெருவெளியில் உள்ள யாவற்றையும் அவ்ர்றின் அகத்திருந்து ஆள்கின்றதையும் அந்தக் குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அனுபவப்படச்செய்கின்றனர். ஆகவே உண்மையில் உரைமனங்கட்ந்த பெருவெளியில் விளங்கும் அம்பலத்தரசர் அகத்திருந்தும் புறத்தே தோன்றாதவராய் அனக ஆட்சியை எங்கெங்கும் புரிந்து கொண்டுள்ளாராம்.
அரைசு – அரசு என்பதன் விளக்கம்; ‘ சு ‘ என்ற எழுத்து, சகர மெய்யும் உகரவுயிரும் கொண்டு சத்தான நம்பதி உண்மையையும் அவர்தம் அருளைந்தொழிற் செயல் உண்மையையும் சுட்டி நிற்பதாம். நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அகத்தே அருள் வண்ணமாயும், புறத்தே ஜோதியாலான உலகெல்லாமாயும் விளங்குகின்றார். இவ்விரு நிலை கொண்ட பதியின் முழு உண்மை , வெளிப்பட விளங்குகின்றதில்லை.புறக்காரியப்பாட்டு உலகநிலையே காணப்படுகின்றது, ஆகவே இக்காரிய உலகம் ஒரு பாதியாகவும், தோற்றரிய அருள்நிலை மறுபாதியாகவும் கொள்ளப்படும், இதனால் அரைசுஆம் கடவுள் ஆட்சியை மட்டும் புறத்தேகாணும் ஒருவன் அக்கடவுளரின் மறுபாடு அருள் நிலையைக் காணாதிருக்கின்றான். திருவருளால் அகமுற்று நின்று நோக்கின் அருள் ஆட்சியின் மாண்பு விளங்கும் , மேலும், அர என்ற சொல் ஒளியைச் சுட்டுவடஹால், ஒளி செய் உலகெல்லாம் ஆண்டவரின் அரைசுதானாம். உலக வழக்கில் அரைசு, அரசு என்பதன் மருவுநிலையெனக் கொள்ளுகின்றனர். உலகியல் அரசன்(ரசம் – சத்தாகிய அருள்) உண்மை அற்றவனே என்பதைக் குறிப்பதாக அமைந்து விட்டிருக்கின்றதாம். மேலும் ‘ ஐ ‘ என்பது கடவுளையே குறிப்பதாயும், உள்ளதால் அரைசு என்பதின் உயர் பொருள் விளங்கும். “ ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் “
என்பது பழமொழி. இதன் உண்மை யாதெனில், ஆயிரம் என்பது கடவுள் உண்மை விளங்கும் அக ஆன்ம நிலையமே ஆயிரம் இதழ்க் கமலாலயமாக இருக்கின்றது . இதில் உறைபவன், தான் என்றும் தன் பதி என்றும் இரண்டு படாது விளங்குகிறான். இந்நிலையே கடவுளரின் இரு பாதியாம் உண்மையனுபவமுண்டாம். இறைவனே அருட்பெரும் முழு வைத்தியனாவான். ஆதலின், அவ்விறைவனின் கலப்பெய்தி தனது நாம ரூபப்பற்று அற்றவனே, ஆயிரம் பேரைக் கொன்றவன், அரைவைத்தியன் ஆவன் என்பது உண்மை.
ஆகவே நமது அருட்பெருஞ்ஜோதி பதியை மனமொழிக்கு அப்பால், அகண்டமாயுள்ள அருட்பெருவெளியில் திருவருளால் கண்டு நின்று அவரது அருளாட்சியின் பெருமையை வியந்து வியந்து போற்றுவாயாக.
அகவல் உரை விளக்கம்
சுவாமி சரவாணனந்தா
தொடரும்,,,
Write a comment