3. ஆகமம் ஆரணம்
5. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
6. ஆகநின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி
(உரைவிளக்கம்) ஆரணம் – என்பது வேதம்,மறை என்னும் கடவுள் உண்மையைத் தன் அகம் கொண்டு விளங்கும் கற்பனா நூல் ஆகும். ஆகமமாவது – அவ்வேத மறைப்பொருளைத் தெளிந்து புற வழிபாட்டுத் துணையால் இறை நிலை எய்த வழி வகை கூறும் நூலாகும்.
வேதமும், மறையும் பொதுவாக ஒன்றெனக் கருதுவர் சிலர், அஃது அறிவுடைமையாகாது. வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கைக் குறிக்கும். மறையோ, அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். வேத மெய்ப் பொருள் புறநிலை நின்றே, பிரம்மானுபவத்தைப் பற்றிப் பேசுகின்றது. மறை, தற்போத ஒழிவில், பதியோடு ஒன்றச் செய்கின்றது. இவையே வேதாந்த சித்தாந்த முடிவாம். வேதாந்த நெறி பிரம்மம் ஒன்றே உண்மையில் இருக்கின்றது. ஜெகஜீவ, பரம் மாயா தோற்றம் என்கின்றது. ஆகையால் பிரம்மானுபவம் பெற மாயா தேகாதி பிரபஞ்சத்தை விட்டொழித்துச் செல்ல வேண்டுமென்கின்றது. இப்படிச்சென்று அடைகின்ற அனுபவம் சூனியமேயாம்! நம் திருமறை நெறியோ, பதி பசு பாசத்தை வலியுறுத்துகின்றது. தற்சுதந்தரமற்ற பசுவானது பதி அருளைக் கொண்டு பாசத்தை யொழித்துவிட்டு , அப்பதியோடு கலந்து மறைய உள்ளதாம். இம்முறையான சிவானுபவம் பெறத்தான் சைவாகமம் விரித்து வழங்கப்பட்டுள்ளதாம். இப்படிப்பட்ட மறைந்தொழியும் முடிவைத்தான் அந்த ஆரணமும் ஆகமும் வழங்குவனவாயுள்ளனவாம். மனிதனுக்கு இந்த பிரம்மானுபவமும் சிவானுபவமும் இவ்வுலக வாழ்வு நிலைத்து விளங்கச் செய்யவில்லை. இந்த வேதாகம முடிவுக்குமேல், இவற்றிற்கு எட்டாத ஒன்றாய்த் திகழ்ந்துகொண்டிருப்பதுதான், உலகமெல்லாம் விளங்கச் செய்து கொண்டிருப்பதாகும். அந்த மேனிலைப் பரம்பொருளே தான் இன்று நமது அருட்பெருஞ்ஜோதி ஆக இருக்கின்றதாம்.
நம் அருட்பெருஞ்ஜோதி பதியைத்தான் அவ்வேதாகமங்கள் பிரம்மம் என்றும், சிவம் என்றும் கற்பித்து லட்சியப் பொருளாய்க் கொண்டிருந்தன. , எனினும் மருளறிவால், மருவிக் கொள்ளக் கருது மடிவுறு முடிவே வழங்கிவிட்டனவாம். இப்பொழுது தான் அருளறிவால் இயல்பாகவே ஒன்றான அருட்பெருஞ்ஜோதியே ‘ ஓடும் உலகுயிராகி நின்றானே’ என்ற திருமந்திர வாசக உண்மையால் தெளிந்து கொள்ளப்படுகின்றது வேதாந்தி எந்தப் பிரம்மத்தை அடைந்து மறைய முனைந்தானோ, சித்தாந்தி எந்தச் சிவத்தைக் கலந்து ஒழியக் கருதினானோ , அதுவதுவான ஒன்றை அருட்பெருஞ்ஜோதியாகவும், அதுவே மனிதனின் இயல் உண்மையாகவு கண்டு அருளின்ப வாழ்வில் தழைக்கத் தொடங்குகின்றான் சுத்தசன்மார்க்கி.
“ பரமதனோ (டு) உலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர்சிவமே என்றறிந்தோம் ஆதலினால் நாமே
பிரமமெனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரிய மதம் பிடியேல்
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவை காரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளன இல் லனவே
தரமிகுபேர் அருளியால் சிவமயமே எல்லாம்
தாமெனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே”
என்றதால், அருள் ஒளிநிலை நின்று சூழ்ந்து நோக்கும்போது , அகத்திலுள்ள ஒன்றான அருட்பெருஞ்ஜோதிபதியே உண்மைச் சிவமாய் இருக்க, அப்பதி உண்மை அனுபவத்தில் வெளிப்படவேண்டியே தன் புற வண்ணத்தையே உலகுயிர்களாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றதாம். ஆகையால் அகநின்று அருளால் யாவையும் ஏற்று வாழவேண்டும் யல்லாது, தேகாதி பிரபஞ்சத்தை விவகாரிசு சத்தென விட்டொழித்துப் பரமார்த்திக சத்தாம் பிரம்மத்தில் மறைந்து விடுவது முறையன்றாம். இதுபோல் சிவபதி நிலையில் இருந்து கொண்டு, அப்பதி வண்ணமாகப் பசு பாசத்தையும் அருள்மயமாய் விளங்கச் செய்து கொண்டு வாழ்தல் முறையாம், “:முப்பொருளும் ஒன்றதெபார் வெண்ணிலாவே’ என்றதால் பதி, பசு, பாசம் மூன்றும் ஒன்றன் முந்நிலைத் தோற்றமாய்க் கொள்ள வேண்டுமே யல்லாது. முத்தனிப் பொருட்களாய்க் கொண்டு ஒழிவது வாழ்க்கை முறையாகாது. ஆகவே, பழமையான வேதாகம முடிவை அருட்பெருஞ் ஜோதியால் நிறைவு படுத்திக் கொண்டு வாழ்விக்க வந்தது நமது சுத்த நெறி.
தொடரும்....
vallalarspace.com/vumt
Write a comment