அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம் ,
சுவாமி சரவணானந்தா
1. அருட்பெருஞ்ஜோதி
1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
2. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம் ) அருட்பெருஞ்ஜோதி என்ற சொல் பொருள் விளங்காத ஒன்றாக இல்லைபோல் தோன்றுகிறது . ஆனாலும் அதன் உண்மை விளக்கம் பெரிதும் பெருமையுடைத்தாகும் . ஜோதி என்றால் , நிறையொளியாம் , பெருஞ்ஜோதியாவது , மிகப் பெரிதாய் நிறைவுற்றதாய் உள்ள பேரொளியாம் , உலகம் கண்ட பெரிய ஜோதி விண்மணியாம் சூரியனே . வான் விளங்கு விண்மீன் ஒவ்வொன்றும் பெரிய பெரிய ஜோதி என்பது அறிவியல் அனுபவம் . ஆனால் இந்த ஜோதிகள் எல்லாம் தோற்றக் காரணமான நிறைபெருஞ்ஜோதியை “ கேலக்ஸி” (galaxy) என்கின்றனர் . இந்நிறை ஜோதிக்கும் இதுபோன்ற பல பேரொளி நிலைகட்கும் இடம் கொடுத்துள்ள அகண்ட பெருவெளி முற்றும் நீக்கமற நிறைந்து நின்று எல்லா ஜோதிகளின் தோற்ற ஒடுக்கங்களுக்கும் காரணமாயுள்ளதுதான் நமது அருட்பெருஞ்ஜோதி ஆகும் . இந்த அருட்பெருஞ்ஜோதியாம் இறை ஒளி அளப்பரிய அகண்ட பெருவெளி எல்லாம் செறிந்து இயற்கையுண்மையாய் இருந்துகொண்டும் , இயற்கை விளக்கத் தோற்றங்களாய் வெளிக்காட்டி மறைந்துகொண்டும் , இயற்கை இன்பத்தை , முடிவில் நிறைமனித வடிவில் அனுபவ பூர்வமாய் வழங்கிக் கொண்டும் இருக்கின்றதாம் . இவனது அனுபவத்தில் தான் இந்த அருட்பெருஞ்ஜோதியின் நிறை உண்மை விளக்கம் கண்டு கொள்ளப்படுகின்றது .
மேற்படி அருட்பெருஞ்ஜோதி நான்கு நிலை கொண்டதாய்க் குறிக்கப்படுகின்றது .
( புறத்தே )
1. வான் வெளி நிறை மின் காந்த ஒளி நிலை .
( வான் கலந்த பெருஞ்ஜோதி அக்கினி நிலை )
2. விண்மணியாம் ஞாயிறு ஜோதி நிலை
3. தண்மதி நிறைகளைச் சந்திர ஜோதிநிலை
4. தீபச்சுடர் விளக்கின் ஒளி நிலை
இவைபோன்று பக்குவ மனிதனின் அக அனுபத்தே நான்காய் விளங்கும் ஜோதி நிலையுளவாம் . அவையாவன ( புறமிருந்து அகம் நோக்கிச் செல்லும்போது )
1. தேகேந்திரிய விளக்க ஒளிநிலை
2, மனோகரண விளக்க ஒளிநிலை
3. ஜீவ உணர்வு விளக்க ஒளிநிலை
4. ஆன்ம ஞான விளக்க ஒளிநிலை ..
இந்த நானிலை அனுபவம் உண்டாகவேண்டு , சரியை , கிரியை , யோகம் , ஞானம் , என்ற நெறிகளை வகுத்து , அவற்றின் அடைவாக , சாலோக , சமீப , சாரூப , சாயுச்சிய , பதவி விளக்கங்களையும் வழங்கினர் ஆன்றோர் . இந் நானிலை முடிவே , நான்கு கால் ஒன்றாவது போல் முழு நிலை அனுபவத்தைக் கூட்டி வைப்பதாய்க் கொள்ளப்பட்டதாம் . இதனையே முடிவாகக் கொண்டதால் இறையொளி கண்ட ஒருவன் அவ்வொளியில் நாட்டம் வைத்துக் கலந்து மறைந்தே போனான் . அப்பாடி மறைந்து ஒழியாது , வாழ்வு பெற்று விளங்கவே நம் அக அனக சுத்த சன்மார்க்க திருவருளால் வெளியாக்கப்பட்டுள்ளது .
சுத்த சன்மார்க்கி தயவோடு கூடிய சத்விசாரத்தால் அகம் விளங்கும் அருள் இறை ஒளியை ஆன்ம ஆலயமாகிய சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு கலந்து அதுவாகி நின்று அவ்வருட்பெருஞ்ஜோதியையே விரிவு செய்து ஜீவனிலும் , கரணத்திலும் , இந்திரிய தேகத்திலும் நிரம்பிடக்கொண்டு வாழ்வதால் அருட்பெருஞ்ஜோதியின் முழுநிலை அனுபவமும் பெற்று முடிவிலாதென்றும் விளங்கலாம் என்பது நம் வள்ளல் பெருமான் கண்ட உண்மையாகும் . ஆகவே இந்தக் கடவுட் பேறு எய்தும்படி திருவாய் மலர்ந்து அருளப்பெற்ற இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலின் தொடக்கத்தே இந்த நான்கு அருட்பெருஞ்ஜோதியை காண்கின்றோம் . அடுத்து வரும் அடிகளின் விளக்கத்தை ஆய்ந்து கொள்வோம் .
தொடரும் … ..
Agaval explanation of Sri Saravananantha swamigal, is a great work.
I kindly hereby request the space team to upload this entire agaval with vallalar.org, so that the viewers will get more benefit.
thank you