காட்சிக்கெளியர்
இராமலிங்கப்பெருமானார் ஆடையணிவதில் காட்டிய அடக்கத்தை, தம் வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலுமே கடைப்பிடித்தார், பேசுதல், நடத்தல், நிற்றல், இருத்தல் ஆகிய ஒவ்வொன்றிலும் அடக்கத்தை வெளிப்படுத்தினார்.
“ அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.
என்ற குறட்பாவின் விரிவுரை அடிகளாரின் வாழ்க்கை வரலாறு. உடம்பு தடிப்பதையும் வெறுத்தவராகி
தளைத்திடும் ஊன் உடம் பொருசிறிதுந்
தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின்றேன் இது நான்றான்
இயம்பெலென் நீ அறிந் ததுவே”
எனப் பாடுகின்றார் வள்ளல் பெருமான். இளைத்த உடம்பையும் வெள்ளாடையால் மறைத்து வாழ்ந்த பெருமான் உயர்ந்த ஆசனத்தில் அமரவும் விரும்பினார் அல்லர். இதனை
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
என்ற அருட்பாவால் அறிகின்றோம். அவர் ஒவ்வொரு ஆன்மாவையும் பரம்பொருளின் அம்சமாகவே கருதினாராதலால், உயர்ந்த ஆசனத்தில் தாம் அமர்ந்தால் அச்செயல் தாழ்ந்த இடத்திலுள்ள ஆன்மாக்களை அவமதித்ததாகி, தெய்வ நிந்தனை செய்த பாவம் நேருமோ என்று அஞ்சினார். இதே பொருளில்தான் –‘’ பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் என்றார் தாயுமானவர் .
அருட்பா தந்த அருளாளர், தம்மை ஓர் அற்ப மனிதராகவே கருதினார் – பிற மனிதரைவிட ஏன் பிறிதொரு உயிரை விடத் தாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் அவரிடத்தில் இருக்கவில்லை. பரம்பொருள் படைத்த உயிர்களனைத்தையும் சமமாகவே மதித்தார், அந்த உயர் குணத்திலிருந்து பிறந்ததே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்ற அவரது புதிய கோஷம், ஆனால் சூழ்ந்திருந்த பக்தர்கள் அவரைத்தெய்வமாகவே கருதி வழிபட்டனர். அவரிடம் உபதேசம் பெற்ற சன்மார்க்கத் தொண்டர்களும் இதற்கு விலக்காக் இல்லை. அது கண்டு உளம் நொந்தவராகி
“ சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடுங் கேட்பீர்
என்மார்க்கத் தெனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய்ய வல்ல நமது இறைவனியே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறு சில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய் விளங்குஞ் சுத்த சிவ மொன்றே
தன்னாணை யென்னாணை சார்ந்தறிமின் ஈண்டே”
என்று பாடி , தம்மைத் தொழுவதை விட்டு எல்லாம் வல்ல இறைவனைத்தொழுது சாகாவரம் பெறுமாறு அறிவுரை கூறினார். மனிதர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் மூட நம்பிக்கையை அவர் அடியோடு வெறுத்தார் அது பற்றி அவர் மகோபதேசத்தில் கூறுவதாவது
“ தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள் ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக்கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்…
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்
Fine artic.e
Tnq.