சாதியுமதமும்சமயமும் பொய்யென
ஆதியிலுணர்த்தியவருட்பெருஞ்ஜோதி
சாதி மத கோட்பாடு மனித மனம் சம்மந்தப்பட்டது. அது ஒற்றுமைகெடுத்திச் சாதனமாகும். இரக்கத்துக்கு அது நேர் எதிர் மாறானாது என்ற செய்தியை ஆதி பிறப்புக்கு முன்னேயே ஆன்மா தோற்ற செயலில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்றவாறு.
சாதியும் : மனித இன உருவால் மனிதர்களுள் வகுத்துக்கொண்ட பிரிவினைவாத அமைப்பும்
மதமும் : மனித மதி வித்தியாசத்தால் ஆன்மீகத்தில் வேறு வேறு கருத்துக்களை போதித்து கூட்டங்கூட்டமாக பிரித்துக் கொள்ளும் பேரமைப்பும்.
சமயமும் : கடவுள் கொள்கையில் கல்லிலும் இட்டிகைகளிலும் உலோகத்திலும், மரத்திலும், உருவதோற்ற வித்தியாசம் கற்பித்து தெய்வ வழிபாட்டில் தனித்தனி கடவுள் கொள்கை கொண்டவைகள் அமைப்பும்
பொய் : பொய்யாகும் உண்மைக்கு புறம்பானது
என : நீதி அற்றது என்று
ஆதியில் : பூர்வத்தில், ஆதி ஆன்ம தோற்றத்தில்
உணர்த்திய : எனது ஆன்ம உணர்விலிருந்து உணர்த்திய
அருட்பெருஞ்ஜோதி : அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்றவாறு
எனது ஆன்ம உணர்வில் உணர்த்தப்பட்ட உண்மைகளில் சாதி மத சமயச் சாரங்கள் அனைத்தும் பொய்யானவைகளே என உயர்த்தி அறிவித்து அருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்றவாறு.
வெளிப்படை: மனித ஆன்மாவுக்கு முன் பலதரப்பட்ட இருள்கள் நிற அலைகளாக மறைத்துக்கொண்டிருப்பதால் கடவுள் அருள் ஆன்மாவுக்கு தெரிய ஒட்டாமலும் அறிவுக்கு ஆன்ம அனுபவ ஞானம் புலப்படாமலும் செய்கிறது. மேலே கடவுள் தன்மை ஆன்மாவுக்கு மறைக்கப்படுகின்றது. கீழே ஆன்ம அனுபவம் மன அறிவுக்கு புலப்படாமலும் தடுக்கிறது. இந்த தடுப்புச்சுவர் போன்ற இருள் ஆற்றலுடன் சாதி மத சமய எண்ண இருள் கூடும் பொழுது ஆன்ம பிரகாசம் மேலும் தனது ஈர்ப்பும், வெளிப்பாடும் செயல்படா வண்ணம் தடுக்கப்படுகிறது..
ஒரு மனித மனத்தில் சாதி சமய இருள் நிலைகொள்ளும்பொழுது சிந்தனையும் உணர்வும் நினைப்பும் அந்தபக்கம் திரும்பப் படுகிறது. சரீரத்தின் உள் ஆன்ம ஆற்றல் குறிப்பிட்ட அளவே உள்ளதாகும். அவ் ஆற்றல் மன வழி சம்மந்தமான சாதி மத சமய வழி சென்றால் ஆன்மலெட்சணம்பாதிப்படைந்து ஆன்ம உணர்வு நஷ்டமடைகிறது,
சாதி மத சமய உணர்வு கொண்ட மாந்தர்கள் இது நாள் வரை அவற்றால் ஏதாகிலும் பயனடைந்தார்களா எனில், அது இல்லை என்ற பதிலே கிடைக்கும் உண்மைக்கு எதிர்மாறானது பொய்யாகும். பொய்யை மனம் சாரும்போது ஆன்மா குடி கொண்டுள்ள உடல் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்க வேண்டும். உண்மை என்ற கடவுள் நியதிபக்கம் மன ஆற்றல் திரும்பும்போது ஆன்மா ஒளிநிலை பெறுகிறது. இந்தசெய்தியை ஆன்ம அறிவு என்ற ஆதியில் உணர்த்தியது அருட்பெருஞ்ஜோதியே ஆகும் என்றவாறு.
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்
அருட்பா ம. கோவிந்தசாமி