அட்டமா சித்திகள்
“ அட்டமா சித்திகள்” என்பவை எட்டுவகையான பெருஞ்சிந்தனைகளைக் குறிக்கும் அவை பின்வருமாறு:
1) அணிமா: பூதவுடலை அணுப்போன்று சிறியதாக்குதல்
2) மகிமா: மேருபோன்று பெரியதாக்குதல்
3) இலகிமா: காற்றுப்போல இலேசாக்குதல்
4) கரிமா: பளுவாக்குதல்
5) பிராப்தி: அனைத்தையும் ஆளுதல்
6) வசித்துவம்: எல்லோரையும் தன் வயப்படுத்துதல்
7) பிராகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல்
8) ஈசத்துவம் : விரும்பியதனை யெல்லாம் செய்து முடித்து அனுபவித்தல்
திருவிளையாடற் புராணத்தில் – “ அட்டமா சித்தி அருளிய படலத்தில் “ உள்ள கீழ்வரும் பாடல் இதற்குச் சான்றாகும்.
“ அணிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப்
பிணிமா சுடையோர்க் கடைவரிய
பிராகா மியமீ சத்துவமெய்
துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென் றெட்டா மிவையுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின்
வகையா மவற்றின் மரபுரைப்போம்
இந்தப் பாடல் தொடங்கி எட்டுப் பாடல்களில் “ அட்டமா சித்திகள்” பற்றி விளக்கன்ந் தருகின்றார் திருவிளையாடற் புராண ஆசிரியரான பரஞ்ஜோதி முனிவர். தாயுமானவரும்
“ கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையுங்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலவலாம்
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி லும்புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறன் அரிது சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே”
என்ற பாடலில் , சித்து விளையாடுதல் எளிதென்றும், அதனினும் சிந்தையை அடக்கி சும்மாயிருபதே அரிதென்றும் கூறுகின்றார். இதனால் சித்துகள் புரிவதினும் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறனே சிறந்ததென்பதையும் புலப்படுத்துகின்றார் தாயுமானவர்.
இன்னும் சித்தர் கணம் என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல்களில், சித்தர்களின் ஆற்றல்களை யெலாம் விளக்குகின்றார் தாயுமானவர்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்