Vallalar Universal Mission Trust   ramnad......
வட்டி மேல் வட்டி

வட்டி மேல் வட்டி

வட்டிமேல் வட்டி வாங்கிப் பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர்களே, பட்டினி கிடப்பாரைப் பார்க்கவில்லையே? என்ற பாட்டும் இடித்துரைப் பாட்டு.

வட்டி மேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டியைவைத் தாள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண்டொட்டியுள் இருந்தீர

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபொல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே

கட்டும் கனமும் பட்டும் பணியும் கொட்டும் முழக்கும் இருந்தென்ன பயன்? பசியோடு வந்தாரைப் பார்க்காதபோது.

வட்டிமேல் வட்டி; வட்டிக்கு வட்டி முதல் வட்டி சாதாரண வட்டி (simple interest) இரண்டாவது வட்டி கூட்டு வட்டி (compound interest) இதுதான் வட்டிமேல் வட்டி, வட்டிமேல் வட்டி வாங்கினால் பெட்டி மேல் பெட்டி வைத்து ஆளலாம். ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி , அடுக்குப்பெட்டி, அடுக்குப்பானை போல, ஒரு பெட்டிக்கு இரண்டு பெட்டி, ஒருபெட்டி போதாது என்று இரண்டாவது பெட்ட், முதற்பெட்டி மரப்பெட்டி, இரண்டாவது பெட்டி இரும்புப் பெட்டி; முதற்பெட்டி வீட்டிலுள்ள பெட்டி, இரண்டாவது பெட்டி பாங்கில் உள்ள லாக்கர் பெட்டி, இக்காலத்தில் உள் நாட்டுப் பாங்கில் பெட்டிகளோடு வெளிநாட்டுப் பாங்குகளிலும் பெட்டி. இப்படிப் பெட்டி மேல் பெட்டி வைத்து ஆண்டு என்ன பயன்? வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள்ளிருப்பதே பயன். வயிற்றைப் பெட்டி என்கின்றார் வள்ளலார். பணப்பெட்டி இருக்கிறதோ இல்லையோ வயிற்றுப் பெட்டி எல்லோருக்கும் இருக்கிறது. பணப்பெட்டி நிரம்புகிறதோ இல்லையோ வயிற்றுப் பெட்டியை நிரப்பியே ஆகவேண்டும். பணப்பெட்டி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும். ஆனால் வயிற்றுபெட்டியோ எல்லோருக்கும் ஒரே அளவில் இருக்கும் , சாண்வயிறு என்கின்றோம். எல்லோருக்கும் சாண் வயிறுதான் யாருக்கும் முழவயிறு இல்லை . ஏழைக்கும் செல்வர்க்கும், பாமரர்க்கும் பண்டிதர்க்கும் எல்லார்க்கும் பொதுவான பாடு வயிற்றுப்பாடுதான். எல்லாப் பாடுகளும் வயிற்றுப்பாட்டுக்காத்தான். உயிர்களுக்கெல்லாம் ஆண்டவன் பசியா வரம் கொடுத்துவிட்டால் என்ன ஆகும். கொடுத்த அப்போதிலிருந்தே உலக வாழ்க்கை இயங்காது. யாரும் எந்த முயற்சியும் செய்யமாட்டார்கள். ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கமாட்டார்கள். உலக வாழ்வே ஸ்தம்பித்துவிடும். பசியும் கடவுளால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி’

என்கிறார் வள்ளலார் . வயிற்றுப்பெட்டியை நிரப்புவது என்பது இதுதான். பெட்டி மேல் பெட்டிவைத்து வாழ்கிறோம். நமது வயிற்றுபெட்டியை நிரப்புகிறோம் பிறரது வயிறும் நிரம்பவேண்டும் சம்பாதித்துச் சாப்பிடச் சக்தியற்றவர்கள் ஏழைகள் வயிறு நிரம்பவேண்டும். நம் வயிற்றை நிரப்புவதோடு அவர்கள் வயிற்றையும் நிரப்பவேண்டும். பட்டினி கிடந்தாரைப் பார்க்கவும் நேரீர் என்பதன் பொருள் இதுதான்.

புரட்சித்துறவி வள்ளலார்

ஆசிரியர் சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள்

vallalarspace.com/vumt