உயிரிரக்கம்
உலகத்து உயிர்களுக்காக அவ்வுயிர்கள் படும் துன்பங்களைக் கண்டு இரங்கிக் கண்ணீர் வடிக்கின்றவர்களால்தான் இச்செயலில் ஈடுபடமுடியும். உயிர்களுக்காக வருந்தி இறைவனை அழுது அழுது கேட்டுத்துன்புற்றால்தான் இந்நிலையை பெறமுடியும்
“ இந்த ஏழை படும்பாடு உனது திருவுளச் சம்மதமோ
இது தகுமோ இதுமுறையோ இது தருமந்தானோ”
என்று கூறிய வள்ளலார்
“கோழை உலகு உயிர்த் துயரம் இனிப்பொறுக்க
மாட்டேன்”
என்று கூறுவதைக் கருதவேண்டும். யான் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினைச் சார்ந்தவன் உயிர்த்துயரம் பொறுக்க மாட்டேன் என்று குறிப்பிடுவதை நோக்குதல் வேண்டும்.
“ படமுடியாது இனித்துயரம் பட்டதெல்லாம் போதும்
படமுடியாது அரசே”
என்று அவர் அழுவது அவருக்கு நன்மை உண்டாக்கிக் கொள்ளுவதற்காக அன்று. உலகத்து உயிர்களுக்காக வருந்தி அழும் உயிர் இரக்கம். உயிர்த்துயரம் உடையவர்களே இப்பணியை ஆற்ற முடியும். இறைவனிடம் அழுது அழுது வாங்குவது யாருக்காக உலகத்துயிர்களுக்காகவே,
திருஞானசம்பந்தர் மூன்றுவயதில் இறைவனை நோக்கி அழுதார். இறையருள் வண்ணம் தமக்குக் கிடைத்த சிவஞானத் தெள்ளமுதாகிய பாலைத்தானே குடித்துவிடாமல் தேவாரமாக உலகத்துயிர்களுக்கு வழங்கினார். உயிர்களின் மேல் வைத்த உயிரிரக்கம் காரணமாகவே அழுதார் . அழுகையால் கிடைத்த பயனை உயிர்களுக்கே வேறு வடிவில் வழங்கினார்.
“பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையின் இயற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு – நாவால்
மறித்துஎம் செவியமுதாய் வார்த்தபிராம் தண்டை
வெறித்தண் கமலமே வீடு”
என்று சிவப்பிரகாசர் நால்வர் நான்மணிமாலையிற் குறிப்பிடுகின்றார்.
“ வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூதபரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந் தழுத”
என்று இதே கருத்தைச் சேக்கிழாரும் விளக்கியமை காண்க.