திருவடிப்புகழ்ச்சி படல்வரிகள் (20)
(20) பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த
பதமகா மவுத ரூபம்
(பதவுரை) பாவன அதீதம் _ ( பாவிக்கும்) பாவனைக்கு அப்பாற்பட்டது. குண அதீதம்-( ஆன்மாகட்குரிய) குணங்கள் அணுகமுடியாதது. உபசாந்தம் பதம் _ ( எத் தொடர்பும் இல்லாத) அமைதிமயம் ஆனது; மகா மவுன ரூபம் – மாபெரும் மோன சொரூபமானது, ( எ-று)
( வி-ரை) பலப்பல உருவம், பலப்பல பெயர்கள், இன்ன காலத்தில் இன்னது நிகழ்ந்தது. இந்த அவதாரத்தில் இச்செயல் என்று,பெயரும் உருவும் பெருக்கி, பார்க்கப் படுவன யாவும் பாவனை நிலை.
“ அவனருள் கண்ணாகக் காணின் அல்லால், இப்
படியன், இந்நிறத்தன் , இவ்வணத்தன், இவன்
இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”:
என்று உரிய சுருதி உரைத்தபடி,அரிய திருவருள் அறிவித்தா லன்றிப் பாவனைக்கு எட்டாதது பரம்.
பாவனை வேறு, கற்பனைவேறு இல்லதை உள்ள தாக்கல், உள்ளதை இல்லது ஆக்கல் கற்பனை. உள்ளதற்கு உருவம் கொடுத்து உணர்வது பாவனன. முயல் கொம்பில் ஏறி, ஆகயமான தாமரையைப் பறித்து, ஆமை மயிரில் கோத்து, உருவிலிக்கு அணிந்தானாம் ஒருவனென்பது கற்பனை.
நித்தியமாய் நின்மலமாய் நின்ற சிவம், இன்ன இன்ன திருமேனி யேற்று நிற்கிறது. என்று பாவிப்பது பாவனை.
குறி ஒன்றை நிறுத்தி, அதைக்கூர்ந்து நோக்கி, பரம இது நான் எனப் பாவித்து, ஆழ்ந்து அதன் மயமானால் , பிரமசொரூபம் தன்னில் பிரதிபலிக்கும் இது பாவனையாலான பயன். அறிகிறவானாகி, அறியும் அறிவாகி, அறியப்படு பொருளுமாகி, அடடா! என்ன அற்புதமான அனுபவம் இது!
“ நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமோணென்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசும் ஓர் நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமே”
எனும் சிவவாக்கியம் இங்குச் சிந்திக்கத் தகும். பாவனையில் ஓம் நாதன் உள்ளத்தில் உறவாவன். ஊன்றி அதனை உணர்ந்தவர் முன், நட்டகல்லும் பேசும், சமைத்தபின் சட்டுவத்தைத் கழுவித் தூய்மை செய்து உலர வைத்தபின்னும் , பாகமானவற்றின் வாசனை அப்பாத்திரத்தைவிட்டுப் போகா! அதுபோல் வழுக்கும் பல பிறவிகளில் தொடர்ந்தவாசனா சம்பந்தம் அகல, ஓம் நாதனை உள்ளிருத்தும் வித்தகப் பாவனை ஆரம்பத்தில் வேண்டப்பெறும்! அனுபவம் சித்திக்கும் அந்நாளில் , அந்த பாவனையும் அகன்று விடும் மெய்யான இவைகளை எண்ணும்போதே மெய் சிலிர்க்கின்றதே.
தாமச இராஜச சாத்விகமென்னும் ஆன்ம முக்குணங்கட்கு அப்பாற்படு செய்தி, குணரகிதமென்று முன் குறிப்பிடப் பெற்றது; அது வேறு நிலை, தன்வயம், தூயமேனி, இயற்கை உணர்வு, இயல்பாகவே பாசங்கள் இன்மை, முற்றும் உணர்தல், பேரருள் வரம்பிலா இன்பம், முடிவிலாத ஆற்றல் முதலிய இறைமைக்கே உரிய எண்குணங்களின் இறுதியில் விளங்கும் இயற்கை சொரூபமாதலின், ‘ குண அதீதம்’ என்றார். இக் குணங்கட்குப் புறம்பாக, விமலலயிடம் விளையாடல் முதலிய வரலாறுகளும் உளஎனில், கலங்கிய நீரில் சந்திரன் அசைவு காணப்பெறும்; இயற்கை மதியில் அந்த அசைவு இல்லல. அதுபோல், எச்செயலிற்கும் அதீதம் ஆனது இறைநிலை ; வரலாறுகள் யாவும் அருளாடல்கள்; பெரும்பான்மை ரூப அலங்காரங்கள் என்று எண்ணுகின்றனர் புண்ணிய புனிதர்கள்.
அமைதி ஓய்வு, மகிழ்வு, பொறுமை முதலியன பொருந்திய சொரூபம், உபசாந்த பதம் எனப் பெறும். அப் பெயர்ப் பொருள், பதமான இடம் என்பது, உப என்பது, அடைமொழி, இந்திரபதம், குபேரபதம் என்பதுபோல், உபசாந்த பதம் என்று மேலோர் உணர்கின்றனர். ஓயாது செயல்படும் கருவி கரணங்கள் ஓய்வு பெற்று, ஆணவத் தடிப்பு அகன்று, ஆன்ம சொரூபத்தை அறிந்து இனிய தூய்மை எய்தி, நீங்கா விஷய வாசனைகள் நீங்கி, சாக்கிரம் எனும் விழிப்பு நிலையில் அதீத நிலையை அணுகி, தன் இழப்பைத் தழுவி, வியாபகப் பரத்தில் வியாப்பியமாகி தெளிந்த நீர்போல் அமைதி அமையும் அந்நாளில் , உரிமை கொண்டு வருவது உபசாந்தம்.
“ ஆறா(று) அமைந்(து) ஆணவத்தை உள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழுப சாந்தமே
என்று திருமந்திரமும்
“ உலகமெலாம் தனிநிறைந்த உண்மையாகி,
யோகியர்தம் அனுபவத்தின் உவப்பாய், என்றும்
கலகமுறா உபசாந்த நிலையதாகி;
என்று மகாதேவமாலையும் அறிவிக்கும் இச் செய்தியை அறிந்து கொளல் நலம்.
தனித்து, விழித்துப் , பசித்தவரை, மோன நிலை தழுவிமுறுவலிக்கும். நள்ளிரவின் மோன நிலை, முன்னிற்கும் இயற்கையின் முதல்பாடம், யுக்தி வாதங்களூம், சமய பேதங்களூம் மனோலயத்தில் மாளும்.
“ வாதமும் சமய பேதமும் கடந்த
மனோலய இன்ப சாகரமே”
எனும் பட்டினத்தடிகள் இங்கு எண்ணற்கு உரியவர். பரத்தில் நினைவு படர்தல் எனும் கரண மோன, வாக்கு மோனம், ஆக்கை மோனம் யாவும் இதனில் அடங்கும். மகா மவுன ரூபமே பரம்.
“ மோனம் என்பது ஞான வரம்பு
“மெளன ராசாங்கத்தில் அமர்ந்தது அழகிது அந்தோ”
என்றார் தாயுமானார்
“ வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்கும் தேவே!
“ அன்பர் மோகமே” மோகமெலாம் அழிந்து வீறு
மோனமே! மோனத்தின் முளைத்த தேவே!
மவுனவெளி யூடிருந்து வயங்குத் தேவே!
எனவரும் மகாதேவமாலைப் பாடல்கள், இங்கு மனனம் கொள்ளற்கு உரியன.