(14) பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத் துவம்தற்
பதம் சிதம் பரவி லாசம்
(பதவுரை) பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம்- ஐந்தொழிலுள் தூய தலைமை நிலை, தன்னதென்று தாங்குவது; தற்பரம் – தனக்குத் தானே தலைமையானது; சிதம்பர விலாசம் – விண்ணன ஞான விலாசம் ஆனது.
(வி-ரை) ஆடையின் அழுக்கை அகற்ற நினைப்பவன், முன்வந்து அதற்கான முயல்வுகள் செய்வன். அதுபோல், ஆன்ம அழுக்கை அகற்ற, முழுப்பொறுப்பு ஏற்றுளது அந்த முழுமுதல்.
மாபெரும் அச் செயலிற்கு , முதற்காரணம் மாயை; அதன் கருவிற் கட்டுண்டு கலங்கும் உயிர்களின் கட்டவிழ்த்தற்கு உரிய பருவுடலையும், நுண்ணுடலையும் உண்டாக்குதல்.
தொல்லை உடலால், கருவிகள் தொழிற்படும், உணரத் தக்கவைகளை ஆன்மா உணரும், வாழும் முறை யறிந்து வாழும்; இவைகட்கென்றே உருவாக்கிய உடல், கரணம், உலகம் அனைத்தும், இடையில் அழியாமல் காக்கும் தொழிலே காப்பு எனப்பெறும்.
காக்கும் கருணையைக் கருதாமல் , அற்ப ஆசையால் அகம் புழுங்கிப் பல அவதிகளை அடையும் ஆன்மா, அது கண்டு திருவுளம் இரங்கி ஆன்ம இளைப்பை அகற்றும் சால்புடைச் செயலே சங்காரம்.
இல்லத்திற்கு எல்லை மதில்கள் இருப்பது போல், அநியாய வினைகளின் பயனை அனுபவிக்கும் பொழுது, அவ்வினைகளை மட்டும் நினைவில் மன்னச் செய்வது மறைப்பு எனப் பெறும்.
நல்வினைகளால் இன்பமும், தீ வினைகளால் துன்பமும் மாறி மாறி வந்து மற்போர் புரியும். இன்பத்தை ஏற்று எய்திய இடர்களும் மிகப் பல; துன்பமோ இடையிடையே துவள்விக்கின்றன. தீவினைப் பயன் இரும்பு விலங்கெனில், நல்வினைப் பயன் பொன்விலங்கு, ஆம் எதுவானாலும் என்ன பயன்? இரண்டும் விலங்குதானே என்று எண்ண வரும் , அதன்பின் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாய்ப்பார்க்கும் தூயமனம் நேரும். இந்நிலையில் , மோதும் இருவினைகளும் ஏமாந்து போகும். இஃது இருவினை ஒப்பு எனப்பெறும்.
சார்பான வினைகள் இரண்டும் சமமான காலத்தில், முழுமுதலான பரம் பரம குரவனாக எழுந்தருளும்;; பரிபாகம் எய்திய ஆன்மாவின் அழுக்குகளை அகற்றும். அச்சம் இல்லை. ; இனி உனக்குப் பகையில்லை என்று அருளுபதேசம் அளிக்கும். இதுவே அநுக்கிரகம். இந்த ஐந்தொழியையும் இடையறாது இயற்றுவதே பஞ்சகிருத்தியம் எனப்பெறும். இவைகளைச் செய்பவர்கள் பிரமன் , திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் எனப்பெறுவர். ஆம், இந்த ஐவரும் செயலர்கள், செயல்கலை அவர்கள் தம் உல்ளிருந்து செய்விப்பது பரசிவம், அதனால்தான் , அதை சுத்த கர்த்தத்துவம் என்றார். ( பஞ்ச –ஐந்து திருத்தியம் தொழில், சுத்த – தூய , கர்த்தத்துவம்-தலைமப்பேறு)
முதல் இடை கடை கடந்த முழுமுதல் பேரொளி, தத்பரம் எனப்பெற்றது. ( தத் பதத்தால் உணர்த்தப் பெறும்) அது எனும் பரவஸ்து தற்பரம்.
“ தன் மயமாய்த் தற்பரமாய் விமலமாகி” என்பது மகாதேவ மாலை எட்டாவது பாடல் ( தத் – அது ; பரம் – மேதகு முதன்மை)
“ சித் என்ப சயமே ஞானம்” என்பது, சூடாமணி நிகண்டு இதனொடு அம்பரம் புணர்ந்து , சிதம்பரம் என்றாயது. ) சித் – ஞானம் ‘ அம்பரம் – விண்) இது சிதாகாசம் எனவும் பெறும்.
உள்ளக் கமலத்தை ஞான ஆகாயம் என்று எல்லா நூற்களும் இயம்புகின்றன. அச்சிதம்பரம் , அருள் என்னும் பரையினால் எங்கும் நிறைந்து , அண்டங்கள் அனைத்தையும் இருத்தி வைத்தலுக்கு இடமாகி, பேரொளி மயமாய்ப் பொன்னம்பலம், தகராலயம் , கோயில் என்றெல்லாம் கூறப் பெறும்.
அண்டத்துள் சிறு பிண்டம், பிண்டத்துள் பெரிய அண்டம் என்றுமுள இந்த அற்புதத்தை அறிவிக்க உலகில் சொற்களே இல்லையே . “ அணுவுள் அவனும் அவனுள் அணுவும் , கணுவற நின்ற கலப்பதுணரால்” எனும் திருமந்திரம், இந்த அந்தரங்கத்தை அறிவிக்கின்றது.
படைப்பதி ஐந்தொழில்கள், தகராலாயத்தில், இருந்த் என்றும் நடைபெற்றபடியே இருக்கின்றனர், அழியா உணர்வினர், தம் இமையாத ஞான விழியால் அதைச் சதா தரிசிக்கின்றனர்.
“ உடலுள் ஆன்மா உறவாடும் வரை, உள்ளக் கமலத்தில் உள்ள கிழக்கு நோக்கிய இதழில் புண்ணியப் பெருக்கமும், தென்கீழ் இதழில் ஆலசியமும், துயிலும் தெற்கிதழில் குரூரமான அறிவும், தென்மேற்கு இதழில் பாவ அறிவும், மேற்கிதழில் புணர்ச்சிப் புத்தியும், வடமேற்கு இதழில் நடையறிவும், வடக்கு நோக்கிய இதழில் அமைதையறிவும், வடகீழ் இதழில் ஞானமும், கமல கொட்டையில் வைராக்கியமும், மகரந்தத்தில் ஆன்ம நினைவும் உண்டாகின்றன. என உபநிடதங்கள் உரைப்பதை ஊன்றி உணர்பொழுது எல்லாம்சிதம்பரத்திலிருந்தே எழுகின்றன என்பது தெரிகிறது. அல்லவா! இவைகளை உணரும் பொழுதே உடல் சிலிர்க்கின்றதே!
எனவே உள்ளக் கமலம் சிதம்பரம் என்றும், அதனுள் இரண்டான்மா என்றும், ஒன்று சீவன்; மற்றொன்று சிவன் என்றும், அங்கிருந்தே உயிர்க்கூத்தும் சிவக்கூத்தும் உருவாகின்றன என்றும்,. இங்கு இவ்வளவு உணர்வது போதும். பரவிசிவத்தின் விலாசம் யாது என்பார்க்கு, சிதம்பர விலாசமே அதன் இயற்கை விலாசம் என்று எண்ணியபடி.
திருவடிப்புகழ்ச்சி,
குகத்திரு இரசபதி அடிகள் உரை..