(12) பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம்
பரசுகோ தயம் அட்சயம்
(பதவுரை) பர அமுதம் – ( ஆன்ம உணர்விற்கு) அருளமுதம் ; நிர் ஆகரம்(எதற்கும்) அடங்காதது; விகாசனம் – பேரொளிப் பிழம்பு; விகோடணம் – ஓசை ஒலிகள் உதிக்கும் இடம்; பரசுக உதயம்- பேரின்பம் பிறக்கும் இடம்; அட்சயம் – நிலை குறையாது) என்றும் நிறைவது .
(வி-ரை) கடலைக் கடைந்தனர் அமுதம் எழுந்தது. அதனுடன் உருத்து ஆலமும் உதித்தது. அலறினர் இமையவர் நம்பன் வெளிப்பட்டான். நஞ்செடுத்து உண்டான். உய்ந்தது உலகம். அதன்பின் வானவர் அமுதுண்டு வாழ்ந்தனர்.
எடுக்கக் குறையாமல் பொற்கலசத்தில் அமுதம் இருக்கிறது. அதைக்கவர்ந்து கொள்ள, அரக்கர் ஒரு காலம். அசுரர் ஒரு காலம் இரவென்று பகலென்று இல்லை. எந்த நேரத்திலும் எதிர்ப்பு எழுமோ என்றூ
அஞ்சி , தேவர்கள் இமையாக் கண்ணர் ஆயினர். இது வெறு செய்தி.
அந்த அமுதல்ல இங்கே எண்ணுவது. இது இறவாமை செய்வது. பிறவாமை தருவது. மதிமண்டலத்தில் இருந்து வழிந்து பெருகி வருவது. என்றும் இருப்பது. பருகுபவரைப் பருகுவது. இருமை கெடுப்பது. ஒருமையை உதவுவது. சீர்மை பெறச் செய்வது. சிவமாக்குவிப்பது. ஆம், இதுதான் பராமுதம். இது சொரூபத்தின் சொரூபம் ஞானிகட்கே உரிய அதிநுட்ப விருந்தான இதை எண்ணி.
“ திருவொற்றி யூர்க்கோயில் சார்ந்து
மகிழ் அமுத சாகரமே”
என்று, விண்ணப்பக் கலிவெண்பா விளித்தலை யறிந்துளம்.
“ அச்சமது தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்.
நிச்சலும் பேராநந்த நித்திரை செய் கின்றேனே:
என்று வள்ளலார் வாய்குளிர , உளங்குளிர ஓதுவதும் இங்கு உணரத் த்கும்.
அளக்கும் கருவி இறை; பிற யாவும் அளக்கபடுபொருள்கள்; எனவே, யாவும் இறைமையில் அடங்கும்; இறைமை எதற்கும் அடங்கா, அது நிராகரம் ( ஆகரம்-அடங்குதல் நீர் – இன்மை)
“ நிறை இன் (ற) அளந்து காட்டுகென, நெடியோன் மகனைப்
பொடியாக்கும் மறவன், கபாலி யாகிப் பலிக்கு வருகின்றான்”
தாருவனத்தர் முன்வரும் தற்பரன் செய்தியை, இப்படிப் பாடி மகிழ்கின்றார் பரஞ்ஜோதியார். இதனுடன் வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய இங்கிதமாலைச் செய்தி முழுதும், நிராகரன் நிமலன் என்பதற்குச் செய்த விரிவுரை என்பதை இங்கு எண்ணிக் கொள்ளல் நலம்.
விண்மீன்கள், மதி பரிதி, நாள்கள், கோள்கள் யாவும் ஒளிப்பொருள்கள் அருள் ஒளியின் சார்பால், விண்ணில் அவைகள் விளங்குகின்றன. அவ்வளவுதானா!
பருமையுடல், நுண்ணுடல், காரணவுடல், இவைகளில் உள்ள அறிகருவிகள், தொழிற்கருவிகள், புலன்கள், கரணங்கள், அனைத்தும் ஒளிமயம், அநியாயமான லெளகிகத்தில் இவைகளை அணைந்துவிட , விதியும் மதியும் விறுவிறுக்கின்றன. அக ஒழுக்கம் புறவொழுக்கம் காத்தால், ஆன்மாவை வியன் மயமாக்கும் விகாசனம், (காசனம் – ஒளி வி- விளக்கம்)
:” ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சிவ
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி”
என்று, குறிப்பாக இதை வேறு ஒரு இடத்தில் கூறியளர் வள்ளலார். பெருங்கருணையால் உடனிருந்து உதவுகின்ற பேரொளிப் பிழம்பை, விகாசனம் என்று கருங்கலாற்றுச் சொல்லால் குறிக்கும் அருமை கோடிபெறும்.
ஓசையும் ஒலியும் உதிக்கும் இடம், விகோஷணம் எனப் பெறும். “ ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்பது தமிழ்மறை. ‘ பாட்டுவித்தால் பாடுகின்றேன்’; பணிவித்தால் பணிகின்றேன்’” என்பன யாவும், விகோஷண நுட்பத்தி உணர்ந்து மனமுருகி ஓதுவதாம்.
சூக்குமை, பைசயத்தி, மத்திமை, வைகரி முதலிய அரிய வாக்குகளில் இருந்து ஒலி அணுக்கள் எழும்;’ ஒலியிலிருந்து ஓசை பிறக்கும்; ஓசை நாதத்திற் சென்று லயமடையும். நாத உயிர்ப்பானவன் நம்பன். ஆம். அவன் விகோஷணன்; என்ன அற்புதமான செய்தியிது;
இன்பம் என்று எதிபார்ப்பவை யாவும், துன்ப முழுமையில் தோயவிடும்;. சுகம் என்னும் சொல்லின் நடு இடமான சுகரத்திறே துக்கம் என்பது பொருள். பேரின்பம் உதிக்கும் பெருமித இடம் பரம். அதனை நினைந்து , அதற்கென்று செய்யும் இறைவழிபாட்டு முயல்வில் தன்னை அர்ப்பணித்தால் கண்முன் இருந்த பொருள் எல்லாம் கரந்து விடும். பரம் ஆன்மாவைப் பெற்றும். பேரின்பம் ஆன்மாவில் பிறக்கும் அரிய இந்த அனுபத்தை
“ முன்னிலை ஏது இல்லாதே-சுகம்
முற்றச்செய் தே என்னைப் பற்றிக்கொண் டாண்டி.
என்பர் தாயுமானர்.
இந்நிலையை உணர்ந்து, பரசுகோதயம் எனப் பெற்றது.
முன்னே சகோதயம் என்றார். அதன் குறிப்பை அங்கே அறிக’; அது வேறு கலை; இது வேறு நிலை.
கஷயம் – அழிவு ,. அ – இல்லை. எனவே அட்சயம் என்பது, என்றும் குறைவு இல்லாதது என்னும் பொருளது- அட்சய பாத்திரம் என்னும் மாட்சியான ஆட்சியை இங்கு எண்ணலாம். இப் பெயர், உபநிடதங்கள் பலவற்றினுள.
தொடரும்
திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி,
குகத்திரு இரசபதிகள் அடிகள்..