(11) பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம்
பரமதந் திரம்வி சித்ரம்
(பதவுரை) பர அபரம் – இயற்கை யறிவும் (இடைவந்த) நூலறிவுமாக இலகுவது; அநாமயம் – ( என்றும்) பிறவிநோய் இல்லாதது; நீர் ஆதரம்- ( எந்த) ஆதாரமும் ( தனக்கு) இல்லாதது; அகோசரம் – (புறக் கண்கட்குப்) புலன் ஆகாதது; பரம தந்திரம் – உயர்ந்த உபாயம் ஆனது; விசித்திரம்-மிகமிக வியத்தற்கு உரியது. (எ-று)
(வி-ரை) அருள் மயமான அறிவு பரம்; பொருள் மயமான புத்தி அபரம் எனப்பெறும்; பரம் – மேலிடம். அபரம் கீழிடம்; பரம் – சிவநிலை; அபரம் – சக்தி நிலை;
“ நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளூம் எண்ணெயும் போல்நின்ற எந்தையே”
என்பது தமிழ்மறை.
ஆமயம் – பிறவிப் பிணி, நீர் ஆமயம் – இயல்பாகவே பிறப்பு இல்லாமை.
தான் அனைத்தையும் தாங்கி, தன்னைத் தாங்க ஒரு பொருளும் இல்லாதது ஆதலின் ‘ நிராதரம்’ என்றார்.
கோசரம் – புறக்கண்கட்குப் புலனாவது ; அ – எதிர் மறை; எனவே’ அகோசரம்- ஆழ்ந்த நோக்கிற்கும் அகப் படாதது என்றபடி.
“ காணொணாதது உருவோ டருவது
பேசொணானது உரையே தருவது
காணும் நான்மறை முடிவாய் விளைவது
ஒன்று நீயே
என்பது திருப்புகழ்
அவரவர் தரத்திற்குத் தக்கபடி தன்னைக் காட்டும் தந்திரத்து பரம்’ இந் நிலையில் தான் அருவம், உருவம், அருவுருவம், அவைகள் அனைத்தையும் கடந்த அதீதம் என்றாகியுளது மற்று புறப்புறம்,. புறம் அகப்புறம்,. அகம் எனவுள சமய நூற்கட்கும் அந்த அற்புத முழுமுடல் அகப்படுதல் இல்லை, பரம தந்திரம் – மேலுரைத்த சமய நூற்கட்குப் புறம்பாகி, அருள் நூற்களின் சொரூபமாகியுளது என்பது ஒருவகை. ( பரம தந்திரம் – அதிநுட்ப அனுபவ அருள் நூல்: தந்திரம் என்பது ஆகமத்திற்கு உரிய பெயர்;)
“ இத்தந்திரத்திற்காண்டும் என் றிருந்தார்க்கு
அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்”
எனும் திருவாசகத் திருவண்டபகுதி, இங்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!
பரத்தின் அருளாணையை மேற்கொண்டு பிரமன்படைப்பு, திருமால் காப்பு, உருத்திரர இளைப்பாற்றல் முதலிய தொழில்கள் முறையே நிகழ்கின்றன. இவைகளை அவர்களின் இருந்து இயற்றி, அவர்களும் பிற ஆன்மாக்களும் அறியாதபடி வாளா சாட்சி மாத்திரமா யிருக்கும் அருள் இறைமையின் அற்புத்தத்தைப் பரம தந்திரம் என உணர்ந்து நெகிழ்ந்து ஓதினார் எனலும் ஒருவகை.
“ பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத வண்ணம்
ஆவண்ணம் மெய் கொண்டவந்தன் வலியாணை தாங்கி
மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யா, வாளா
மேவண்ணல்; அன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்”
என்று பரஞ்ஜோதியார் பாடுவது, இங்கு மனம் கொளத்தகும்.
விமல அருளாட்சியில் விசித்திரங்கள் மிகப்பல. மற்றும் பலவான உலகத் தோற்றங்கள் இயங்கி வாழ்க்கையில் இருக்கும் செயல்நிலை , சேமிப்பும் அனுபவிப்பும், மீட்டும் சேமிப்புமான வினைகளின் விரிவான விளைவுகள் எல்லாம் வெறும் கண்மயக்கே எனுமாறு, கடைநாளில் அனைத்தும் அடங்கி ஒடுங்கும் அதிசயம், அனைத்தையும் ஆன்மாக்களில் இருந்தே நடத்தி, இறுதிவரை அவைகட்குத் தன்னைக் காட்டா இதைவிட விசித்திரம் யாதுளது?
“ நோக்கினும் நுழைகிலை, நுவலு கின்றதோர்
வாக்கினும் அமைநிலை, மதிப்ப ஒண் கிலை,
நீக்கரும் நிலைமையில் நிற்றி எந்தை! நீ
ஆக்கிய மாய மீ தறிந்தி லேமரோ!
என்று வாழ்த்தும் வாக்கில் வாழ்வானை, அவ்வாக்குஅறிந்தில நோக்கில் இருப்பானை நோக்கு அறிந்தில ‘ மனனத் தில் மலர்வானை அம்மனம் அறிந்திலாது. என்ன விசித்திரம் இது! இதுகொண்டே சொரூப நிலையில், விசித்திரம் எனுமொரு பெயர் பரத்திற்கு சொல்லப் பெறுகிறது.
திருவடிப்புகழ்ச்சி,
குகத்திரு இரசபதிஅடிகளுரை.