(9) பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம்
பரம்பரம் அநந்தம் அசலம்
(பதவுரை) பர வியோகம் – அதி நுண்மையான ஆகாயம்; பரம ஜோதிமயம் – மாபெரும் ஒளிமயம்: விபுலம் (வீண்) பழிப்பு இல்லாத வியாபகம்; பர அம்பரம் இயற்கையே ஆடையாக இயல்வது; அநந்தம் – இறுதியில்லாதது; அசலம் – அசைவு இலாதது(-)
(வி-ரை) அகத்தும் புறத்தும் இருள் மயமான ஆகாயம், அகத்தும் புறத்தும் காலக் கனல் போன்ற பராகாயம்; அகத்தும் புறத்தும் அளவிறந்த ஒளிமய உள்பொருளான மகா ஆகாயம்; அகத்தும் புறத்தும் பரிதி போன்ற சூரிய ஆகாயம்ல் ஓதற்கரிய பேரொளியாய் நிரதிசய இன்ப வடிவான பரமாகாயம்; இப்படியே சீத ஆகாயம், நீல ஆகாயம், தூம ஆகாயம், அழலாகாயம், மின் ஆகாயம், செவ்வாகாயம், வெள்ளாகாயம் , தெள்ளாகாயம் முதலிய அனைத்திற்கும், அந்த ஞானாகாயப் பெருவெளியே ஆதாரம் ஆகும். உணர்வுள் ஒளிரும் அதனைப் பரவியோமம் என்றார்.
(வியோமம் – விண்)பருமை விண்ணில் பரிதி உதிப்பது போல், பராகாயத்தில் ஞானசூரியன் படர்கின்றான்.
இன்றெனக் கருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகிற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே!
ஒன்று நீ யல்லை, அன்றி ஒன்று இல்லை
யாருனை அறியகிற் பாரே!
எனவரும் திருவாசகம் இங்கு எண்ணற்கு உரியது.
“ உலகம் உவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அளிரொளி”:
எனப்பெறும் இதனை உணர்ந்து உறவு பூண்ட சாதகர்கள், ஊன்றி அதனில் ஒன்றி விடுகின்றனர்.
இங்ஙனம் பரவியோகம் ஆகி, அதனில் பரமஜோதி மயம் ஆகிறது அப் பரசிவம். வெளியில் அருளொளி இருந்த வண்ணம் இவ்வண்ணம்.
விபுலம் – விரிவு; சூடாமணி நிகண்டு காண்க. மற்று, விளக்கமான, அறிவிற்கு அறிவு ஆனது விபுலம் எனினுமாம். ( புலம் – அறிவு; வி- விளக்கம்) விபு நிறைவுடையது’; அசைத்திற்கு அரியது என்பாருமுளர்./
பரத்திற் பரமா யிருப்பது பரம்பரம்; மேலான பரமாயிருப்பது பரம்பரம். பரத்தை ஆடையாக உடையது பரம்பரம்; (அம்பரம் ஆடை.) அதிதூர அனுக்கிரக மயமானது பரம்பரம் என்றெல்லாம் விளக்கங்கள் கூற அப்பொருள்களைத் தாங்கும் தரத்தது பரம்பரம்.
அநந்தம் என்பதற்கு, பரிச்சேதம் இல்லாதது என்பது சங்கர பாஷ்யம்; பரிச்சேத, முடிவு; வரையறை இல்லா அதனை, அநந்தம் என்று அனுபவித்தபடி.
போக்கு வரவற்ற புனிதமெய்ப் பொருள்; அசலம் என்று அறியப் பெறும். அட்ட மூர்த்தத்துள் ஒன்று ஆன்மா. ஆன்மாவிற் பரம் அமர்ந்து; ஆக்கை அசைவிக்கும் ஆன்மாவிற்கும் அறிவிக்கும். தான் மட்டும் அசையாது அமையும். அசலமான பரமே அந்தர்யாமி என்றுஅறியப் பெறும்.
மற்று அசலம்;- அசையா மலையே போல்வது’ அதை அறிவிக்க இறை இருந்ததுகயிலைமலை . தேவி இருந்தது இமயமலை, குமரற்கு உரியது குறிஞ்சி நிலம். இப்படிச் சிறக்க ரூபகாலங்காரம் செய்துளர் மேலோர்.
“ அருளருவி வழிந்து வைழிந் தொழுக ஓங்கும்
ஆநந்தத் தனிமலையே;
என்பது மகாதேவ மாலை.