(8) பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம்
பகிரங்கம் அந்த ரங்கம்
(பதவுரை) பரநாத தத்டுவ அந்தம் – ( அரிய) தத்துவங்கட்கு அப்பாலான அருள் நாதத்திற்கும் அப்பாற்பட்டது ; சகச தரிசனம் – (காணும்) சம நிலையிற் காட்சி யாவது; பகிரங்கம் – ( வெறும் பேச்சாளர்க்கு) வெளிப்படைபோல விளங்குவது; அந்தரங்கம்-(அனுபூதிமன்கட்கு) அந்தப்புர ரகசியம் போவது(எ.று).
(வி-ரை) ஓசைக்கு உயிர் ஒலி; ஒலிக்கு உயிர் நாதம்; நாதத்திற்கு உயிர் பரநாதம்; பரநாதத்தின் உள்பொருள் ஒரு கோடி; அதற்கும் அப்பால் ஆனது எதுவோ அதை, பரநாத தத்துவ அந்தம் என்றார்.
“ பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம்; மேலைப்
பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம்; பாசம்
எரிக்கும் இயல் பரநாத நிலைக்கண் மெல்ல
எய்தினோம்; அப்பாலும் எட்டிப் போனோம்
தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம்; எங்கும்
சிவமேதின் சின்மயமோர் சிறிதும் தேறோம்’
தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
தனிநின்ற பரம்பொருளே! சாந்தத் தேவே!”
எனும் மகாதேவமால, இங்கு நம் நினைவிற்கு வருகிறது அல்லவா!
சக – சமம்; ஜம் – உதயம், இது சகசம் எனப் புணர்ந்தது; ஆகாத மும்மலச் சேட்டை யகன்றயின், இயற்கை உண்மை ஞான விளக்கம் எழும்;’ அந்த விளக்கம் மிக்க போது அருள் ஒளி. அடடா! என்ன அருமையான செய்தியீது!
நான் தானாகிற நாளில், கவின் மிக்கு விளங்கும் இக் காட்சியை சகச தரிசனம் என்றார்.
“ நானானான் தானானான் நானும் தானும் ஆனான்”
“ நானாகி, நான் அல்லன் ஆகி, நானே நான் ஆகும்
பதமாகி, நாந்தான் கண்ட
தானாகித், தானல்லன் ஆகித், தானே தான் ஆகும்
பதமாகிச், சகச ஞான வானாகி:”
எனும் மகாதேவ மாலையை இங்கு எண்ணல் நலம்.
“ வலத்தயன் வரவு காணான், மாலிடம்
காணான், மன்ணோர்
குலத்தையும் காணான், விண்ணோர்
குழாத்தையும் காணாள், ஞானப்
புலத்தவர் போலக் கண்ட பொருளெல்லாம்
மழுமான் செங்கைத்
தலத்தவன் வடிவாக் கண்டாள்
ஒருதனித் தையல் மாது”
எனவரும் பரஞ்ஜோதியார் பாடலு, சகச தரிசனத்திற்கு விரிவுரை செய்ய முயல்கின்றன என்று உணரலாம்.
எளிமைக்கு எளிமையானது இறைநிலை; இது புறநிலை
யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இவ்வுலகம்
தீதென் றறிவித்த தேசிகன்”
எள்ளித் திரிந்தாலும் இந்தா என் றின்னமுதம்
அள்ளிக் கொடுக்கின்ற அப்பன்”
அன்றொருநாள் நம்பசிகண்டந்தோ தரியாது
நன்றிரவில் சோறளித்த நற்றாய் காண்
நாம்தேடா முன்னம் நமைத்தேடி, பின்புதனை
நாம்தேடச் செய்கின்ற நற்றாய் காண்”
என வரும் நெனுசறிவுறுத்தலில், இறையின் பகிரங்க நிலை இனிதறியப்பெறும். மற்று, உருப்போட்டிருக்கும் பாக்களைக் கொண்டு, அறிந்தார்போல் அருளொளி குறித்து வாய் திறந்தால், அருளொளி வெள்ளிடை மலையென விளங்கல் போல் இருத்தலின், பகிரங்கம் என்றார் எனினுமாம்.
உள்முக நாட்டம், உடையவர்களின் உணர்வொடு கலந்து உறவு பூணலின் அந்தரங்கம் என்றார்.
“ அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள்
ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே”
எனும் பகுதி யிங்கு எண்ணத் தரும்.
திருவடிப்புகழ்ச்சி
குகத்திரு இரசபதிஅடிகள் உரை.
தொடரும்..