Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி தொடர்ச்சி 5

(5) பவபந்த நிக்ர விநோத சகளஞ்சிற்

பரம்பரா நந்த சொரூபம்

(பதவுரை) பவ பந்த நிக்ரக விநோத சகளம்- பிறவித் தளையைப் பெயர்த்தெறியும் அதிசிய உருவத் திருமேனி; சித் பரம் மேலிடத்து ஞானமயம்; பர ஆநந்த சொரூபம் ( வளரும்) பரையின் மாபெரும் இன்ப வடிவம்(.று)

(விரிவுரை) பாவ புண்ணியச் சார்பாகிப் பவம் வரும். வந்த பிறப்பில் பந்தம் வரும்- சொந்த பந்தங்களால் தொல்லைகளே தொடரும். அதனால் அயர்ந்து வருந்தும் ஆன்மா பந்தம் தவிர்ந்தலால் பவம் அகலும். அது கருதிய பரசிவம், தளரும் ஆன்மாக்களின் தளைகளை அறுக்க, விளையாட்டாகப் பல திருமேனிகளைத் தானே விளைவித்துக்கொண்டு வெளிப்படும். அத்திருவுருவங்களை, விநோத சகளம் என்றார்.

உற்பவம் என்பது, முதனிலை கெட்டு பவம் என நின்றது; பவத்திலிருந்து பந்தம்; பந்தத்திலிருந்து பாந்தவ்யம், க்ரகம்-இடம்; நி என்பது, நீக்கல் எனும் பொருளது; எனவே; பந்த நிலைகளைத் தவிர்ப்பதைப் பவ பந்த நிக்ரகம் என்றார்.

உலகங்களை, எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களை, வினைகட்குத் தக்கபடி இயக்கி விளையாடுவது ஆயினும், அவைகளைன் கட்டில் தான் அகப்படாதது ஆதலின் , விநோத சகளம் என்றார்.

பிரமன் திருமால் உருத்திரன் மகேசன் என உருவநிலை நான்கு, விந்து நாதம் சத்தி சிவம் என அருவநிலை நான்கு. சதாசிவம் என அருவுருவ நிலை ஒன்று. சார்ந்த இவ்வொன்பதும் சகளம் எனப்பெறும்.

இவைகள் ஒவ்வொன்றும், ஆன்மாக்களின் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவங்கள், நீள இவைகளை நினைக்கும் பொழுதே நெஞ்சம் பெரிதும் நெகிழ்கிறதே!

சகளம் எனும் உருவ வழிபாட்டில் உயர்ந்து , மனத்தில் ஒருமை மலர்ந்து , அதன்பின் பரத்தின் உணர்வு படரும், இது வழிமுறை, பூதியும் இன்றி, அனுபூதியும் இன்றி, வழி முறையாக மேலோர் வளர்ந்தவர்கள் என்பதை உணர்வதும் இன்றி, படக்கென்று இவ்வழிமுறையை மறுப்பது மரபாக மாட்டாது.

முதல்வரியின், சின்மயம் இங்கே இருப்பது சிற்பரம், முதலது ஞானமயம் எனும் பொருளது ; இது ஞானத்தில் ஞானமென மேலிருந்து விளைவது எனும் குறிப்புடைய திருப்பெயர். சித்பரம் ம்- பரஞானமாகப் பலிப்பது எனினுமாம்.

இரண்டாம் வரியில் பரசுகம் அடுத்து சத் சித் ஆநந்தம் என்றார். அவைகள் வேறு வேறு நிலைகள்’; அவைகளின் பொருள்களை அங்கே அறிவது நலம். இகம் தோன்றாக் காலத்தில் விளையும் பராநந்த சொரூபச் செய்தியை இங்கே உணரலாம்.

ரூபம் கண்கட்குக் காட்சியாவது ; சொரூபம் புனித உணர்விற்கு மட்டும் ஓரளவு புலனாவது; அமலாநந்தம், விமலாநந்தம், சகஜாநந்தம், பரமாநந்தம், என்பன, ஒவ்வொரு நிலையில் விளங்கும் அனுபவங்கள்’; இங்கே குறிப்பது பராநந்த சொரூபம், இது, முடிந்த இடத்து இன்ப முழுமை எனும் குறிபுத் திருப்பெயர். பரையுடன் மருவிய இன்ப வடிவம் என்பது தேர்ந்த பொருள்.

திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதிஅடிகள்.