Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி..தொடர்ச்சி வரிகள் 4

4. பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத

பெளதிகா தார நிபுணம்

(பதவுரை) பரம தத்துவம் அதி நுண்மையான உள்பொருள்: நிர் அதிசயம் அதிசயத்திற்கு அப்பாற்பட்டது; நிட்களம் ( அனைத்துமான) உருவங்கட்கும் அப்பாற்பட்டது; பூத பெளதிக ஆதார நிபுணம் ஐந்து பூதங்கட்கும் ( அவைகளால் ஆன) உலகிற்கும் ஆதாரமான ஆற்றலை யுடையது (-று)

(விரிவுரை) தத்துவம் வடசொல்; உள்பொருள் என்னும் கருத்தது இப்பெயர்ப்பொருள்,. தொண்ணூற்றாறு தத்துவங்களும் அநாதி நித்தியம் ஆனவை; அவைகள் அனைத்தும் உயிர்க்க உயிர்ப்பது ஆதலின் பரம தத்துவம் எனப்பெற்றது.

தத்துவம் எல்லாம் ஜோதி அந்தத்

தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி

அத்துவி தப்பெருஞ் ஜோதி எல்லாம்

அருளின் விளங்க அமர்த்திய ஜோதி’

என்று இக்குறிப்பு வேறு இடத்திலும் விளக்கப் பெற்றுளது.

அதிசயம் வேறு, அற்புதம் வேறு; திருவாசகத்தில் அதிசயப்பத்து, அற்புதப்பத்து என இருபகுதிகள் இருப்பதை எவரும் அறிவர். அதிசயங்களை , விஞ்ஞான சாதனைகளில் அறியலாம். அந்த அதிசயங்கட்கு அப்பாற்பபட்டது நிரதிசயம்.

நிஷ்களம் அருவம் உருவம் அருவுருவம் எனும் ஒன்பதும் அல்லாதது; சகளம் ரூபம்; அஃது அல்லாதது நிஷ்களம்.

பூதம், புத்திக்குப் புலனாகாத அதிநுட்பம் ஆனது; பிரகிருதியி லிருந்து, விண் ஆதியில் விளங்கியது; விண்ணிலிருந்து காற்று விளைந்தது; காற்றில் பிறந்தது கனல்; தேர்ந்த கனலின் இருந்து நீர் உதித்தது; மகத்தான நீரில் விளைந்தது மண்; உதித்தவாறே இவைகள் ஒடுங்கும்; அரிய இந்நுட்ப ஆரம்பம் அறிய முடிவதில்லை; ஆதலின் , ஐந்திற்கும் ஐந்து பூதங்கள் எனும் பெயரிட்டுளர் ஆன்றோர். பூதங்கல் தனித் தனியாய்ப் புதுமை காட்டின. திருவருள் சங்கற்பப்படி அவைகள், விரிந்தும் செறிந்தும் பெளதிகங்கள் ஆயின. பெளதிகள் பூதங்களின் கூட்டுறவால் உண்டான உலகம்.

மண்ணில் திண்மை; நீரில் சுவை; நெருப்பில் வெப்பு; காற்றில் ஊக்கம்; விண்ணில் கலப்பு என்னும் தன்மைகளாகி , விசுவ உருவம், விசுவாத்மா, விசுவாதிகம் எனும் பெயராகி, உருவாகி, எவரையும் எவைகளையும் தாங்கப்படு பொருளாகியும், தாங்கும் சத்தியாகியும் உளது ஆதலின், பூத பெளதிக ஆதார நிபுணம்’ என்றார்.

) நிபுணம் பேராற்றல் பெருமதி_)

ஆதார ஆதேயம் முழுதுநீ ஆதலால்,

அகிலமீ(து) என்னை ஆட்டி

ஆடல் கண்டவனும் நீ ஆடுகின் றவனுநீ”

என்றார் தாயுமானார். இந்த அருமையை

பார்முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில்

பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி

ஓரைம் பொறியுரு ஜோதி பொறிக்கு

உள்ளும் புறத்தும் ஒளிர்கின்றா ஜோதி”

என்று அருட்பிரகாச வள்ளலார் வேறொரு இடத்தில் இதனை உணர்ந்து நெகிழ்ந்து ஓதுவதை உணர்ந்துளம்.

திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதி அடிகள் உரை

vallalarspace.com/vumt