(3) பரமஞா னம்பரம சத்துவம கத்துவம்
பரமகை வல்ய நிமலம்
(பதவுரை) பரமஞாம – அதிநுட்பமான அறிவு மயம்: பரம சத்துவம் – அதி நுண்மையான ஆற்றல் மயம்: மகத்துவம் – அதிரகஸ்யமான மகிமைமயம்:; பரம கைவல்ய நிமலம் – இயல்பாகவே அழுக்கு இல்லாமல் ( அதிவிரைவில்) கைவந்த அனுபவ மயம் .
(விரிவுரை) நுட்பமாக ஓதிய நூலறிவால், அரிய கேள்வி அறிவால் வருவது அபர ஞானம், மூல வாசனை, தாய்க்கருவில், உண்டான சூல வாசனை, அவ்வப்போது மாறிவரும் கால வாசனைகளால் உளதாம் ஞானம் அவஞானம் இது பவஞானம், தவத்தால் வருவது சிவஞானம் ; பதிஞானம் , அடிஞானம், பரஞானம் என்றெல்லாம் பேசப்பெற்று , பரம அனுபூதியாக விளைதலின், இதனைப் பரம ஞானம் என்றார்.
அசத்தான உடல், அசத்தான வாக்கு, அசத்தான சிந்தனையென்று ஆகாமல், சிவ சிவ என்று சிந்திப்பவரைச் சன்மார்க்கத்தில் சார வைத்து, பரம தெய்வ ஆற்றலைப் பாலிப்பது ஆகலின், பரம சத்துவம் என்றார்.
மகிமைகளை யுடைமை ஆக்கிய மதவாதிகள் பலருளர். அவைகள் வெறுங்கண்கட்டு வித்தைகள், ஆழாழி கரையின்றி அடங்கியிருப்பதும், அண்டங்கள் பல அந்தரத்தில் இயங்கலும், உடலமைப்பும், அவ் உடலில் உயிரின் நுழைவும், இருப்பும், வெளிப்படலுமான செய்திகள் மிக மிக விசித்திரமானவை; ஆம். அவைகள் பரம சத்துவ மகத்துவம், ( மகத் –பெரியது, மகத்துவம் – மாபெரும் மகிமாதிசயம்)
அவரவர் தரத்திற்குத் தக்கபடி “ பரத்தை மறைத்தது பார்முதல் பூதம், பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம்” இந்த மகிமைகளை, எண்ணி அளவிட எவருளர்? அண்டத்தைப் போல் பிண்டத்திலும், சூழ்ந்து எத்தனையோ தத்துவங்கள் சுழல்கின்றன ஊன்றி அவைகளைச் சிறிது உணர்ந்தாலும், புனித அம் மகத்துவங்கள் புலனாகும்.
அநாதியனது ஆணவம், கலகலத்து இடையில் வந்தது கன்மம். இந்த இரண்டையும் விலக்க, மாயைப் பெயரில் இயற்கை எதிரில் உளது. மாயையால் உண்டான தேகம், ஆன்மாவிற்கு அளித்த தீபம், விளக்கின் ஒளியால் இருள் விலகும்., அதுபோல் உடல் உளபோதே உயிருள் உறைவானை உணர்ந்து ஒழுகினால், உய்யும் இந்த உயிர்., ஆன்மாக்கட்கு, அழுக்கு என்றும் கைவல்ய அனுபவம். இயற்கை செயற்கை இரண்டாலும், அழுக்கு இல்லாமையே பரத்தின் கைவல்ய அனுபவம்; இயற்கை செயற்கை இரண்டாலும், அழுக்கு இல்லாமையே பரத்தின் கைவல்ய அனுபவம். ஆதலின் , பரம கைவல்ய நிமலம் என்ற ( பரம என்பது, அதிநுட்பம் எனும் பொருட்டு, கைவல்யம் – கைவசமான எளிமை. நிமலம் – அழுக்கு இன்மை)
திருவடிப்புகழ்ச்சி
குகத்திரு இரசபதி அடிகள்.