திருஅருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் மெய்விளக்கு, பொய்விளக்கு, நெய்விளக்கு, தண்ணீர்விளக்கு ஆகிய்வைகளைக் குறிப்பிட்டு, அவைகளை இணைத்த ஒரு தத்துவ விளக்கத்தையும் அமைத்துக் காட்டுகின்றார்.
“ மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்கு
இல்லையென்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட்பொங்கி
வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்ன நகர்
நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்று ஒரு தண்ணீர்
விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே”
என்ற அருட்பா “ அருள் நிலை விளக்கும் “ என்ற தலைப்பில் காணப்பெறும் தனிப்பாட்டு . இவ்வாறே ‘ அற நிலை விளக்கம் ‘ என்ற தலைப்பில் ஓர் அருட்பா இருக்கிறது. அது இறுக்கம் இரத்தின முதலியாருக்கு எழுதப்பெற்ற முடங்கலின் தொடக்கத்தில் காணப்பெறுகிறது. அத்தகைய அமைப்பிலேயே இதுவும் அமைந்திருக்கலாம். இப்பாடலின் பொருள் கீழே கொடுக்கப் பெறுகிறது.
“ மெய்விளக்கே விளக்கு; வேறுவிளக்கு இல்லை என்று சான்றோர் கொண்டனர். பொய்விளக்கே விளக்கு என்பது என் உட்கிடை. அத்தகைய அனுபவத்தையும் உடலானது புறத்தே வெளிப்படுத்தும். ஆகையால், பொய்விளக்கே விளக்கு என்ற கொள்கை என் அனுபவத்தால் விளைகிறது. அது ஒரு புதுமையன்று. நெய் விளக்கைப் போலவே சந்நிதியின் முன் தண்ணீர் விளக்கும் எரிந்தது. என்பதே அப்பாடலின் உட்பொருள்.
சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம்.
திரு வை. இரத்தினசபாபதி.
Write a comment