உறக்கம்
இரவு 15 நாழிகை முதல் 221/2 நாழிகை வரை (12-00 மணி முதல் 3-00 மணிவரை) மெல்லென உறங்கவேண்டும் என நித்திய கருமச் சிறப்பு விதியில் அடிகள் விதித்துள்ளனர். குடும்ப கோஷத்தில் ஐந்து நாழிகை உறக்கம் சொல்லப்பட்டுள்ளது.
கண்வளர்ந் திடுதலைங் கடிகை மற்றைய
தின்வளர் பொழுதெலாந் தேசி கப்பிரான்
பண்வளர் திருவடிப் பணியும் எம்பிரான்
ஓண்வளர் பணிகளும் உஞற்றி வைகினான்
-முயற்சிப்படலம் 57
சித்திவளாகத்திற் செய்த உபதேசத்தில் ‘ தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் நீடிக்கும். ஒருவன் ஒருநாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழங்கஞ் செய்வானானால் அவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வான்’ என அருளியுள்ளார்கள்.
நித்திய கரும விதியில் ஏழரை நாழிகையும் ( 3மணி நேரம்) குடும்ப கோஷத்தில் ஐந்து நாழிகையும்(2மணி) சித்தி வளாக உபதேசத்தில் இரண்டரை நாழிகையும் ( ஒருமணி நேரம்) உறக்கத்திற்கு விதிக்கப்பட்டது. இராமலிங்க அடிகள் இளமையில் மூன்று மணிநேரமும், பின்பு இரண்டு மணியும் , அதன் பின்பு ஒரு மணி நேரமும் உறக்கங் கொள்வாராயினர். பிற்காலத்தில் அறவே துயில் நீத்தனற்.ர். சாதகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இதுவாம். ‘ தூக்கம் வந்தபோதெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்தபோதெல்லாம் தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக்காலம் என்றெழுந்தேன்’ என்பது அடிகள் வாக்கு (பிள்ளைபெருவிண்ணப்பம் 33) ‘ தூக்கம் தொலைத்த துணையே என இறைவனை விளிப்பர்.
தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
துரைவரும் ஓர் தருணம் இதில் தூக்கமுந்தான் வருமோ
ஈங்கினி நான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடைய தாக்கி
ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குக நீ தோழி
என்னிருகண் மணி அனையார் எனை அணைந்த உடனே
ஓங்குறவே நான் அவரைக் கலந்த வரும் நானும்
ஒன்றான பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே
- அனுபவமாலை 66
என்னும் அனுபவமாலைப் பாடல் துயில் நீத்த நிலையின் அனுபவத்தைக் கூறுவதாம்.