பசித்திரு
அடிகள் ‘ பசித்திரு ‘ என்றதன் பொருள், உண்ணா விரதமன்று, “ சுகித்திருக்க உண்ணாமல், உயிர்தரிக்கப் பாதி வயிறு உண்” என்பதாம். காந்தியடிகள், சதா பசித்திருக்குமளவில் சிறிதளவே உணவுகொண்டார் என்பதனை இங்கு நினை கொள்ளவேண்டும். வள்ளலார் பிள்ளைப் பருவ முதற்கொண்டே தாம் பசித்திருக்கும் விரத்தத்தைக் கடைப்பிடித்ததாகவும் , சில சமயங்களில் பிறருடைய வற்புறுத்தலால் முழு உணவு கொண்டதாகவும் கூறுகின்றார். இதனை
“ உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி
உற்றநான் முதல் ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப்
பேருண வுண்டனன் சிலநால்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம்
உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுக உணாக் கொள்ள
மன நடுங் கியது நீ அறிவாய்”
என்ற பாடலால் அறிகிறோம். திருமுருகாற்றுபடையில் முனிவர்களைப்பற்றிக் கூறுமிடத்து, ‘’ நன்பகற் பலவுடன் கழிந்த உண்டியர்” என்கிறார் நக்கீரனார் , அஃதாவது, அவர்கள் பல பொழுது பசித்திருந்து ஒரு பொழுதே உண்கிறார்களாம். வேளைக்கு வேளை உணவு கொள்வது இல்லறத்தாருக்குப் பொருந்தலாம். ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை விரும்பும் சன்மார்க்கிகளுக்குப் பொருந்தாது.
Write a comment