சாதி – சமயமில்லை
வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கத்தைல் சாதி – சமய பேதங்களுக்குச் சிறிதுகூட இடமில்லை. ஆனால், ஆதியில் அவை தோன்றியதற்கான நியாங்களை வள்ளலார் உணர்ந்திருக்கிறார். பிற்காலப் போக்கிலே உயிர்களனைத்தையும் ஒரு சமமாகக் கருதி அவற்றிடை யே கருணை செலுத்தவொட்டாமல் சாதி – சமயப் பிரிவுகள் தடைகளாக இருந்துவருகின்றன. அதனால், சன்மார்க்கிகள், சாதி – சமய பிரிவுகளுக்கு விலக்கானவர்களாக வாழவேண்டும் என்று விதி வகுத்தார்.
“ தத்துவ வொழுக்கம்பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழிழுக்கம் பற்றிச் சாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு. சாதி ஏற்பாடு முதலிய கட்டுபாடு ஆசாரங்கள்.
“ ஆதலால் மேல்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் மேல்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, ஆனந்த சித்தி முக்திகளைப் பெறக்கூடுமே யல்லாது இல்லாவிடில் கூடாது.”