வடலூர் வாசம் தொடர்ச்சி
என்று திரு இரத்தின முதலியார் என்ற தம் அன்பருக்கு 20/03/1861ல் எழுதிய கடித்தத்தில் இராமலிங்க அடிகளார் குறிப்பிட்டுள்ளார். நகர வாசத்தில் வெறுப்பு மேலிட்டுவிட்டதால் தாம் தங்குவதற்கான ஒரு சிற்றூரைத்தேர்ந்தெடுக்கும் வேலையில் சிந்தை செலுத்தினார். இராமலிங்க அடிகளார் பால் பக்தி செலுத்திவந்த அன்பர் பலர் தத்தம் கிராமத்திற்கு வந்து தங்குமாறு வேண்டினர். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இராமலிங்க அடிகளார் வடலூர் என்னும் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். இதற்குப் பார்வதிபுரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
திருக்கூடலையாற்றூர், திருமுதுகுன்றம், திருவதிகை, திருவிரும்பைமாகாளம், திருப்பாதிரிப்புலியூர், தியாகவல்லி, ஆகிய சிவதலங்களுக்கு நடுவேயும், தென்பெண்ணை, திருக்கடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, ஆகிய நதிகளால் நாற்புறமும் சூழப்பெற்றதாகவும் உள்ள ஒரு பெருநிலப் பகுதியின் அங்கமாக விளங்குகின்றது வடலூர், அங்கிருந்து பார்த்தால் தில்லை அம்பலவாணர் கோயிலின் நான்கு கோபுரங்களும் காட்சியளிக்கும். இந்தப் புனிதத்தன்மையை முன்னிட்டே, வாழ்க்கை வசதி ஏதுமற்ற வடலூரை தேர்ந்தெடுத்தார் இராமலிங்கஅடிகளார்.
இராமலிங்க அடிகளார் வடலூரில் குடியேறிய ஆண்டு இதுவெனத் தெளிவாகத்தெரியவில்லை. ஆயினும் 1867-ல் வடலூரில் சத்தியதருமச்சாலை அமைத்தார் என்பது உறுதிப்படுத்தப்படுவதால். அதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு அவர் வடலூர் சென்றிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம்.
புதிய நெறி
வடலூர் செல்வதற்கு முன்பு அடிகளாரின் உள்ளப் பாங்கும் உடல் தோற்றமும் தனித்தன்மை பெற்று விட்டன. ஆம், அவர் அகத்தேயும் புறத்தேயும் மகத்தான மாறுதலைத் தோற்றுவித்துவிட்டார். காந்தியடிகள், ‘ சத்தியாக்கிரகம்’ என்ற ஒரு பெரு நெறியை உலகுக்கு அளித்ததுபோல், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை’ என்ற சித்தாந்தந்தைக் கண்டுவிட்டார் அடிகளார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்ற புனிதமான கோஷம் அவருடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டுவிட்டது.
பசித்திரு!
தனித்திரு!
விழித்திரு!
என்ற மூன்று மகா மந்திரங்களைத் தம்மைச் சூழ்ந்திருந்த அடியார்களுக்கு உபதேசிக்கத் தொடங்கி விட்டார்.
இராமலிங்க அடிகளாரின் தெய்வ மணம் கமழும் திருவுள்ளத்திலிருந்து பிறந்த திருவருட்பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு அவர் வடலூரில் சத்திய தருமச்சாலை அமைத்த 1867-லேயே முதல் நான்கு திருமுறைகள் வெளியாகிவிட்டன.
தொடரும்….