சன்மார்க்க ஞானியர் எவரும் ஆடம்பர வாழ்க்கையை வெறுப்பது இயற்கை. அது காரணமாகவே நகர வாழ்க்கையை அன்னார் விரும்புவதில்லை. காந்தியடிகள் கிராமப்புறத்திலேயே ஆசிரமம் அமைத்துத் தங்கியதை அனைத்துலகும் அறியும். அவர் அரசியல் இயக்க அலுவல்களைக் கவனிக்க டில்லி மாநகரில் அடிக்கடி தங்க நேர்ந்தபோதும் , கோடிஸ்வரரான பிர்ல்லா மாளிகையைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பங்கிக் காலனியில் தங்கியிருப்பதையே விரும்பினார்.
ஆடம்பரத்தில் வெறுப்பு
சன்மார்க்க நெறியில் வார்தா முனிவருக்கு முன்னோடியான இராமலிங்க அடிகள், தம் பிள்ளைப் பருவத்திலேயே – சென்னை நகரில் தங்கி வாழ்ந்தகாலத்திலேயே – நகர மக்களின் பொய்க்கோலம் கண்டு உள்ளம் பொருமினார். இதனை.
“ வையமேல் பிறர்தம் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லை
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்
என்று அவர் பாடியுள்ள வரிகளால் அறிகிறோம். ஆம்; எந்த நகரைத் ‘ தருமமிகு சென்னை’ என்று அடிகள் வருணித்தாரோ அந்த நகர வாழ்க்கையையே அவர் வெறுத்தார். சென்னையில் இருந்தகாலை பெரும்பாலும் சுற்றுப்புறக் கிராமங்களில் தங்கிக் காலம் கழிப்பதையே விரும்பினார்.
“ தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிறுகுற்ம் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்க ளிலே
நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்து உற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைநன்
எந்தைநீ அறிந்தது தானே”
என்னும் பாடலிலே, நகர வாழ்க்கையில் தமக்கிருந்த வெறுப்பை வெளிப்படுத்துகின்றார். நடராசப் பெருமான் கோயில்கொண்டுள்ள காரணத்தால் தில்லைப் பதியிடத்தே தம் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தார் அடிகளார். அவ்வகையில் நந்தனோடு அவரை ஒப்பிடலாம். ஆயினும் நந்தன் காலத்தில் இருந்த தெய்வமணம் இராமலிங்கர் காலத்திலே இல்லை தில்லைப்பதியிலே அதனால், சிதம்பர வாசத்தையும் அடிகள் வெறுத்தார்.
“ சிதம்பரம் தற்காலத்தில் நமது உயிர்த் துணைவராகிய நடராஜப் பெருமானைப்பற்றி நாம் போவதற்கும் இரண்டொரு தினம் இருப்பதற்கும் தக்கதேயன்றி வேறொரு வகையாலுந்தக்கதாகத் தோன்றவில்லை. ஆயின் அது கலிகால வண்ணம்”.
,,,, தொடரும்