Vallalar Universal Mission Trust   ramnad......
இராமலிங்க அடிகளார் நிலை

இராமலிங்க அடிகளார் , உருவ வழிபாட்டை ஆதரித்தார், ஆனால், அதையே முடிவானாதாக மறுத்தார். வேதாகமங்களை ஏற்றார், ஆனால்,அவற்றிற்கு சிலர் சொன்ன தவறான வியாக்கியானங்களை வெறுத்தார். புராண இதிகாசக் கதைகளைப் பாமர மக்களின் நன்மை கருதி ஏற்றார். ஆனால்,அவற்றை வரலாறாகக் கொள்ள மறுத்தார்.

இப்படி , நடுநிலையில் நின்று இராமலிங்க அடிகளார் சமய-சமுதாயத் துறைகளில் சீர்திருத்தங் காணப் பாடுபட்டதால், அவரை சூன்யர்களான உலோகாயத வாதிகள் வெறுத்தனர். இதற்குத் தத்துவ விசாரிணி’ ஆசிரியர் நடத்திய கருத்துப்போர் எடுத்துக்காட்டு. அப்படியே வேதாகம பண்டிதர்களும், எதிர்த்தனர். இதற்குஆறுமுக நாவலர் காட்டிய எதிர்ப்பும், தொடுத்த வழக்குகளும் சான்றுகளாம். இந்துமதத்தின் உள்ளேயும் வெளியேயுமிருந்து தமக்கு ஏற்பட்ட இந்த எதிர்ப்புகளைக் கண்டு அடிகளார் அஞ்சிவிடவில்லை. தெய்வத்தின் திருவருள் ஒன்றை மட்டும் நம்பி, போலி ஆத்திகத்திடமிருந்தும் புரட்டு நாத்திகத்திடமிருந்தும் மனித சமுதாயத்தை விடுவித்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை யுடைய சமரச சன்மார்க்க சமுதாயம் காணப் பாடுபட்டார்.