இராமலிங்க அடிகளார் மனிதரைப் புகழ்ந்து பாடவில்லை யென்றால், மக்களை அறவே மறந்து மகாதேவனிடம் சரண்புகுந்தாரென்று கொள்ளக்கூடாது. வறுமையாலும் பிணியாலும் அறியாமையாலும் அல்லலுற்று மக்களை நினைந்து, நினைந்து அவர்களின் அல்லல், தீர ஆண்டவனிடம் அழுதழுது முறையிட்டார் வள்ளலார். அவ்வகையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம்.
தாம் புனைந்த பாடல் ஒவ்வொன்றையும் காத்து, அச்சடித்து, அவற்றை அவனிமுழுவதும் பவனிவரவிட்டு, புவனமெங்கும் புகழ்பெற வேண்டும் என்ற ஆசை இராமலிங்க அடிகளாருக்கு இருக்கவில்லை. உண்மையில், மக்களுடைய துயர் கண்டு மனமுருகிய ஞானியர் பரம்பரையிலே முதல்வராக விளங்குகின்றார் வள்ளலார். அடுத்து, அத்துறையில் அவரைப்பின்பற்றிய பெருமை மகாகவி பாரதியினுடையதாகும்.
வள்ளலார் இயற்றிய பாடல்களைத் தொகுத்துநூலாக வெளியிட அன்பர்கள் விரும்பியபோதும் அதற்கு இணங்க மறுத்தார். இந்த அடக்க உணர்ச்சி, தமிழினத்து அறிஞர்களின் – ஞானிகளின் தனிப்பண்பு, போலும்! இந்த பண்பால் அழிந்தொழிந்து போன கவிதைகள் ஆயிரமாயிரமெனலாம்.