சத்திய ஞான சபையை தாம் அமைத்ததற்கு ஆண்டவன் தமக்கிட்ட ஆணையே காரணம் என்கின்றார் இராமலிங்க அடிகளார்.
இதனைச் சன்மார்க்க விண்ணப்பங்களில் முதலில் உள்ள சத்திய சிறு விண்ணப்பத்தைல் கூறுகின்றார்.
“ களைப்பறிந்துதவும் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர்,
“ நெடுங்கால மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமும் தவிர்த்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வ ஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற உத்தர ஞான சிதம்பரத்தில் யாம் அளவு கடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடஞ்செய்வோம் என்றும் ‘ அது தருணமி மிகவும் அடுத்து சமீபித்த தருணம்’ என்றும் ‘ அப்பதியினிடத்தே யாம் அருள் நடம்புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபை காணுதல்வேண்டும்’ என்றும் திருவருள் குறிப்பால் அறிவித்து மன்றி, அருளுருவாகி யெங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி, யாதோர் தடைகளுமின்றி, அத்திருஞான சபையுந்தோன்றி விளங்க்ச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையைக் கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.
“ இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்கத் தொடங்குகின்றோம். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் அருளுருவாகி யெங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத் திருப்பணியில் எவ்விதத் தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்ட்தருளல் வேண்டும்.”
“ எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட்பெருங்கருணைக்கு வந்தனம! வந்தனம்!
இதனால் ஆண்டவன் தம்முள்ளத்தில் இருந்து ஆணையிட்டபடியே இராமலிங்க அடிகளார் ஞான சபை அமைத்தாரென்பது புலனாகும்.
ஞானசபை கண்ட சன்மார்க்கப் பேரியக்கத்தின் தலைவர், அந்தச் சபையில் வந்து ஆண்டவனை வழிபடு என்று அகில உலக மக்களையும் அன்புக் குரல் கொடுத்து அழைத்தார்.
“ வையகத்தீர் வானகத்தீர் நுமது
வாழ்க்கையெலாம் வாழ்க்கையென மதித்துமயங்காதீர்
வையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்து
வாழ்க்கையதே வாழ்க்கையென மதித்ததனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாந் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய் அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே!