சமரச சுத்த சன்மார்க்கி யானவன், இறையருளை நாடிச் சர்வ சதாகாலமும் வழிபடுகின்றான். அவன் வழிபடுவது மத வழிப்பாட்டு பக்தர்களைப்போன்று, தன்னலங்கருதி அல்லது குடும்ப நலன்கருதியன்று, தான், குடும்பம், இனம், மதம் நாடு, என்னும் யாவற்றையும் கடந்து உலகெலாம் நல்வாழ்வு வாழும் பொருட்டே இறைவனைப் பிரார்த்திக்கின்றான். இதனை விளக்கும் கருத்தையும் , கவிதையையும் வள்ளலாரே கூறக்கேட்போம்.
“ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காகமட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல்வேண்டும். அப்படிச் செய்வதால் அதில் அவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. பிரார்த்தனை செய்யவேண்டு மாகில் இப்படித்தான் செய்யவேண்டும்.
“ பாதி இரவில் எழுந்தருளிப்
பாவி யேனை எழுப்பி அருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதிநடஞ்செய் பேரின்ப
நிதிநான் பெற்ற பெரும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்
வுலகம் பெறுதல் வேண்டுவனே”
என்பதே பிரார்த்தனையாகும்.