வள்ளலார் அமைத்த ‘ சித்திவளாகம்’ அருளொளி பெற்றுத்திகழ்ந்தது. வள்ளலாரின் அடியார்களேயன்றி, அவரை அடிமை கொண்ட ஆண்டவனும் அந்தக் குடிசைக்கு வருகை தந்தான் என்றால், அதன் பெருமையை என்னென்றுரைப்பது.
“ வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்ந் தருள்கவெனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே
நல்ல திரு அருளமுதம் நல்கியதன் றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை உள்ளும் நுழைந் தனையே!
“ உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையில்லாதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளமலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணம் எலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே!’
என்ற பாடல்களில் ஒளிமயமான இறைவன் தம் உள்ளத்தில் குடிபுகுந்ததோடு
தம்முடைய ஊனிருந்த சித்திவளாகக் குடிசையிலும் புகுந்ததாகக் கூறுகின்றார், பொய்யடிமையில்லாத புலவர் பெருமானாகிய வள்ளலார்.