இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள் – குறிப்பாக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்ற இந்த தத்துவக் கொள்கை, அகில உலக அளவில் பரவக்கூடிய கருத்தாழமும் தேவையும் உடையனவாகவும் இருந்தும் இவரது அடியவர்கள் திறமையின்மை காரணமாக குடத்துள் விளக்காக உள்ளது. ஆயினும் இராமலிங்க அடிகளாரே இக்கொள்கைகள் பிற்காலத்தில் மற்ற நாட்டவர்களால் வரவேற்கப்படும் என்றும் கட்டியம் கூறிச் சென்றூள்ளார். இன்று பிரம்மஞானசபை என்று வழங்கப்படும் தியோசிபிக்கல் சொசைட்டி என்ற அகில உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுச் சமுதாயம் இராமலிங்க அடிகளாரை தங்கள் சங்கம் தோன்ற மூல காரணமாக இருந்த சிலருள் ஒருவர் எனக் கூறுகின்றனர். ‘ பகாய் நம்பிக்கை’ என்ற புதிய மதத்தின் தத்துவம் இராமலிங்க அடிகளார் கூறிய அடிப்படைத் தத்துவங்களோடு ஒப்புதல் உடைய ஒன்றாக உள்ளது.
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி இராமலிங்க அடிகளார் ஆறாம் திருமுறையில் அதிகப்படியாகப் பாடியிருந்தாலும் ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி தெய்வமணிமாலையிலேயே குறிப்புக்கள் காணப்படுகின்றன. இது அவர் மிகவும் இளமையாக இருந்த காலத்தில் பாடிய பாடல்கள் ஆமும். சன்மார்க்க சங்கம் பிற்காலத்தில் துவங்கினாலும் , ஒருமையுடன் இறைவன் புகழை நினைக்கும் உத்தமர்கள் உறவை வேண்டி ஆரம்ப காலத்தில் பாடினார், பின்னர் பெற்றார். ஆன்மநேய ஒருமைப்பாட்டை பூரணமாக அனுபவித்த நிலையிலேயே அடிகளார் தம் உயிரை பிற உயிர்களிலும் பிற உயிர்களை தம் உயிரிலும் கண்ட நிலையிலேயே வாடிய பயிரைக் கண்டு வாடி, பாடி இருக்கின்றார்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டினை உணர்ந்த இராமலிங்க அடிகளார் அதன்வழி அனைத்து ஒருமைப்பாடுகளையும் அடைந்தார். மற்றவர்களும் அடைய வழி அமைத்துக் கொடுத்தார். சமய ஒருமைப்பாட்டினைப்பற்றியும் தத்துவ ஒருமைப்பாட்டினைப் பற்றியும் மொழி ஒருமைப்பாட்டினைப் பற்றியும், சமுதாய பொருளாதார ஒருமைப்பாட்டினைப்பற்றியும் வலியுறுத்தி அடிகளார் பல பாடல்கள் பாடியுள்ளார்.
தொடரும்….