Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரும் தம்முயிர்போல் ….



எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணல்

எம். இளம்பிறை

அன்பும் அறனும் உடைய பண்பார்ந்த வாழ்க்கை நடாத்தும் ஆன்றோர்கள் கூட பெரும்பாலும் வீடுபேற்றை அதாவது அன்பும் அறனும் ஓம்பி அதன் வழி தாங்கள் பெற்றுக்கொள்ளும் வீடுபேற்றினைக் கருத்தில் கொண்டு அந்த அடிப்படையில் தான் வையக வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். சமயத்தின் உள் நோக்கத்தைப்புரிந்து கொள்பவர்கள் மிகமிகச் சொற்பப்பேர், சமய நெறி என்றால் என்ன என்பதனை நன்கு உணர்ந்து கொண்டு, அதன் உண்மை நோக்கமான உலக உயிர்களுக்குப் பணி செய்து கிடப்பதே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவனே எவ்வுயிரையும் தன்னுயிராய்க் காணும் பேரறிவாளன். உயிர்க்கருணை கைவரப் பெற்றவன். ஈத்துவக்கும் இன்பத்தின் எல்லையைக் கண்டவன். அத்தகையவன் இறைவனைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி மனமார நினைந்து மகிழும் பேறு பெற்றவன்.

திருவருட்பா, தெள்ளிய எளிய வாழ்விற்கான இனிய வழிகளை விளக்கும் திருநூல் அந்தத் திருநூலின் பாக்களை நாம் கலந்து பாடுகின்றபோது விளைகின்றா சொல்லொண்ணா சுகத்தை வேறெங்கும் பெறமுடியாது. அந்த அருள் நூல் திருவாக்கின் துணையோடு நம் வாழ்வியல் அமைகின்ற போது, எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் ஏற்படாது. சாவையும், மாயையையும் கூட அஞ்சி நடுங்கி ஓடச் செய்யும் உண்மை அனுபவம் கிட்டும்.

கண்ணுங் கருத்தும் நின்பாலன்றி பிறர்பாற் செல்லுமோ”

கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ”

என்று இராமலிங்கப் பெருமானுடன் சேர்ந்து நாமும் பேரானந்தம் பெருவெள்ளத்தை அனுபவித்துப் பாட முடியும். நமைக் காணில் “குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போகும், அருட்சிற் ஜோதி நம் கையதாகும்”

உலகுயிர்த் திரளினுள் திருநடம்புரியும்இறைவன், நாளும் நம் நிறு உயிர் வீட்டின் உள்நின்று நடமாடும் தகுதியுடைய இல்லமாக நம் உள்ளத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அருளாளன் படைப்புகள் அத்தனையின் மாட்டும் பேதமின்றி அன்புகொண்டு எவ்வுயிரும் தம்முயிராய்க் கருதி வாழ்ந்து நிற்போம். இகத்தே நாம் பரத்தைப் பெற்றிட வகைஅமையும். இதுபோன்ற எல்லாச் சித்திகளையும் தெளிவித்து சத்திய நிலைதனைத் தயவினில் தருகின்ற அருட்ஜோதி ஆண்ட்வர் கருணையும் சிவமும் பொருளெனக் காட்டி, எவ்வுயிரையும் தம்முயிராய் எண்ணும் கருணியினைத் தன் தனிப்பெருங் கருணை யமுதமாய் நமக்கு வழங்குவானாக.

முற்றும்.

.