Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரும் தம்முயிர்போல்….

தன் மனம் நிறைய இறைவனை விளக்கும்போதும், தனித்த ஒரு சன்மார்க்கத் தன்மை அதில் பெருக்கெடுத்தோடுகின்றது. “பாலானைத்,தேனானைப், பழத்தினானை, பலனுறு செங்கரும்பினானை” என்று இறைவனை அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கொல்லா விரதம் பூண்டோர் உள்ளத்தில் வாழ்வானையென்றுய்ம் கொலைபுரிவாரைக் கொஞ்சமும் பாரானை என்றும் இறைவனை விளிக்கின்றார்.

உடையானை யருட்ஜோதி யுருவினானை

ஓவானை மூவானை யுலவா இன்பக்

கொடையானை யென்குறைதீர்த் தென்னை யாண்டு

கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை

அடையானைத் திருச்சிற்றம் பலத்தினானை

அடியேனுக் கருளமுத மளிக்க வேபின்

இடையானை யென்னாசை யெல்லாந் தந்த

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே”

என்றும்

உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண

உளவெனக்கே யுரைத்தானை உணரார் பாட்டைக்

கொள்ளானை யென்பாட்டைக் குறிக்கொண்டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்

தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி

எள்ளானை யிடர் தவிர்த் திங்கென்னை யாண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின்றேனே”

என்றும் இறைவனை விளிக்கின்றார்.

அருளடியார்கள் தம் தம் அனுபவத்திற்கும், மன உணர்வுக்கும் ஏற்றபடி இறைவனிடம் வரம் வேண்டிப் பெற்றுக்கொல்கின்றனர். பிறவாமை வேண்டுமென்று சிலரும், இன்ப அன்பு மட்டுமே வேண்டுமென்று சிலரும், பலமுறை பிறந்து இளைத்தாலும், இறைவன் பொன்னடிகள் மட்டும் நெஞ்சத்தை விட்டு அகலாத வரம் வேண்டும் என்றும் அடியார்கள் சிலர் வேண்டி வரம் பெற்றுள்ளனர். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா! நின்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும்” என்று திருநாவுக்கரசரும், தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் ஒரு மீனாய்ப் பிறக்கும் விதி வேண்டுமென்று ஆழ்வாரும், இறவாத இன்ப அன்பு வேண்டுமென்று காரைக்காலம்மையும், குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தனின் கழலுக்கே கற்றாவின் மனம் போலக் கசிந்துருக” வேண்டுமென்று மாணிக்கவாசகரும் இறைவனிடம் வரங்கேட்கின்றனர். அருட்பிரகாச வள்ளற்பெருமானும் இறைவனிடம் வரங்கேட்டுப் பெறுகின்றார். தன்னைப் பற்றிய சிந்தனை முற்றிலுமாக நீங்கிப் போக, இறைவன் மாட்டு, வரம் வேண்டும் போதும், உலகுயிர் வாழ வரம் வேண்டி நிற்கிறார். ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்கின்ற இனிய வரத்தை வழங்கிடு இறைவா”என்று கசிந்து உருகுகின்றார்.

///தொடரும்.