அருட்பாவின் ஆறாந்திருமுறையின் இருபத்து ஒன்றாம் பதிகத்தில் “ கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சி” என்று அழகாகப் பேசுகின்றாரே, அக்காட்சி கண்டவந்தான் சுத்த சன்மார்க்கன் அப்பேர்ப்பட்ட சுத்த சன்மார்க்கனும் அன்புப் பிழம்பாய் திரிவான். கருணையும் சிவமும் பொருளெனக் காண்பவன் எவ்வுயிரையும், தன்னுயிராய் காண்பான். அவன் உள்ளத்தில் உயிர்க்கருணை என்றும் விளங்கும். அதுவே அருளின் ஏகதேச விளக்கமுமாகும். விவிலியம் கூறும் தத்துவக் கொள்கைகள் அத்தனையும் “ உன்னைபோல் உன் பிறனுக்கும் அன்புகாட்டு” என்று தெய்வீக நெறி ஒன்றில் அடைக்கலம். அது போன்று அருட்பா பேசும் அத்தனை சன்மார்க்கச் சட்டதிட்டங்களையும் உயிர்க்கருணை என்னும் ஒரு தத்துவக் கொள்கையில் அடைவிக்கலாம். அருட்பாவின் ஜீவநாடியாக இயங்குவது இந்த ஜீவகாருண்யமே. மற்றை நெறிகள் எதுவும் முழு ஆன்ம நெறியையும், முழு மன வளர்ச்சியையும் தர இயலாது.
உயிர்க்கருணை உள்ளத்தே தோன்றி நிலைத்துவிட்டால், அந்த அருள் உணர்வே நாளடைவில் உலகையே ஒரு வீடாகக் காணும் பெரிய மனத்தை மனிதனுக்கு வழங்கிவிடும். பின்னர், தனக்கென்றும், தன் வீட்டிற்கும் எதனையும் காத்து வைத்துக் கொல்ளாது உலகிற்கு உவந்து வழங்குகின்ற நேர்மைத் திறம் கைவரப்பெரும், இறைவன் தன்னை ஆட்கொண்ட காலத்தில் கூட, தன்னைப்போன்ற பிற உயிர்களை இன்னும் இறைவன் ஆட்கொள்ளவில்லையே என்ற ஏக்கந் தான் பிறந்தது வள்ளற்பெருமானுக்கு. தன்னை ஆட்கொண்ட இறைவனிடமே “ இறைவா எனக்கு வழங்கியருளியுள்ள பேரின்பப் பேற்றை, நீ உலகின் எல்லா உயிர்த்திரளுக்கும் வழங்கும் நாளே நான் உகந்த நாள்” என்கின்றார்.
“ பாதியி ரவில் எழுந் தருளிப்
பாவியேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்துஎன் னகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடம்செய் பேரின்ப
நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே”
என்று பாடும் பாடலில் அவர் உள்ளம் தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது.
தொடரும்….