“ அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே “
என்கிறார் திரு அருட்பிரகாசர். அந்த அன்பின் துணை கொண்டே, உயிர்களிடம் கருணை காட்டும் அருள் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள முடியும், அன்பாய்ப் பேசுதலும், அன்புடன் பழகுதலும், அன்பை வளர்த்துக் கொள்ளுதலும், கைம்மாறு கருதாது காட்டப்படும் அன்பை மதித்துப் போற்றுதலும், எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணிப் பாதுகாக்கும் நல்லுணர்வை வழங்கும் அருளாளர்களின் வாழ்வியல் இதற்கு நற்சான்றாக அமைகின்றது. அன்பிருக்கும் உள்ளம் ஒரு ஆலயம். அதில் நெகிழ்வும், மென்மையும் கருணையும் இருக்குமென்பதில் கருத்து வேறுபாடுஇருக்க முடியாது. அருட்பிரகாசரின் உள்ளம் எப்படிப்பட்டதென்பதனை, திருவருட்பா காட்டுகின்றது. பட்டினிகிடந்து, பரிதவிப்பார் முகம் பார்த்துச் சகியாத உள்ளம் அவர் உள்ளம். நீரின்றி நிலவளமின்றி வாடும் பயிரைக் கண்ணால் கண்டாலே வாடும் உள்ளம் அவர் உள்ளம். உலக உயிர்த்திரளில் தான் ஒரு சிறு பகுதியெனவும் , மற்றை விலங்குகளும் தாவரங்களும் அதே உயிர்த்திரளின் அங்கங்கள் எனவும் உணர்ந்த உள்ளம் அவருடையது. அதனால்தான் பசியாலும், மகிழ்ச்சியதவா சூழ்நிலையிலும் பறவைகள் எழுப்பும் ஒலிகேட்டு அவர் உள்ளம் துடிதுடித்துப் போகின்றது.
பட்டினியுற்றார் பசித்தனம் களையால்
பரிதவிக்கின்றன ரென்றே
ஒட்டிய பிறராற் கேட்டபோ தெல்லாம்
உளம்பகீ ரென நடுக் குற்றேன்
இட்டவிவ் வுலகிற் பசியெனி லெந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே.
என்றும்
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேடுளங்குலைந்தேன்
தாக்கிய வாந்தை குரல்செயப் பயந்தேன்
சாக்குரற் பறவையாற் றளர்ந்தேன்.
என்றும் பிள்ளைப் பெருவிண்ணப்பத்தில் நெக்குருகி நிற்கின்றார். பிற உயிர்களுக்கு அன்பு காட்டுவது நம் கடமையாயிருக்க, நாம் பிற உயிர்களைத் துன்புறுத்துகின்றோமே அது எந்த வகையில் நியாயம் என்று சிந்திக்கச் சொல்கிறார். நம் நன்மைக்காப் படைக்கப்பட்ட பிராணிகளை நாமே கொள்வது எந்த வகையில் நியாயம்.
கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
என்று வள்ளுவம் மொழிகின்றது. புலைப்பசியைத் தவிர்த்தார் எல்லாம் அகவினத்தார் என்று அருட்பா பேசுகின்றது. புலைப்பசியைத் தவிர்த்தாலன்றி சன்மார்க்க நன்னெறிகளை ஏற்றுச் செய்லபடுத்துவது மிகக் கடினம். தன் உடலை வளர்ப்பதற்காக, பிற உயிர்களை கொஞ்சமும், இரக்கமின்றி கொன்று குவிக்கும் இழிந்த கொலைத்தொழிலைச் செய்வாரெல்லாம் கருணையில்லாதார் அந்தக் கருணை நண்ணிடாக்கூட்டத்தார் இறைவனை அநுபவித்தல் இயலாதொன்று.
உயிர்க்கொலையும் புலைபுசிப்பு முடையவர்க ளெல்லாம்
உறவினத்தா ரல்லரவர் புறவினத்தா ரவர்க்குப்
பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவே லிங்கே
நயப்புறுசன் மார்க்கமவ ரடையளவு மிதுதான்
நம்மாணை யென்றெனக்கு நவின்றவரு ளிறையே
மயர்ப்பறுமெய்த் தவர் போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் னரசேயென் மாலையணிந் தருளே”
(ஆறாம் திருமுறை அகவல்,38 பாடல் 71)
தொடரும்….