Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் வழியில்

அன்பு என்றால் என்னவென்று

அகிலம் வியக்க அன்று

போதனை சொன்ன புத்தன்

எங்கும் போய் விடவில்லை

அவன்

சாதிக்க வேண்டிய

மீதி தொண்டுகள்

மிச்சம் இருந்ததால்

மீண்டும் பிறந்து

வள்ளலாராக வடிவெடுத்தான்

அவரின் ஆடை

சூரியச் சுடராய்

` பிரகாசித்தது

அந்த

வெண்ணிற ஆடையின்

வெளிச்சத்தில்

உலகத்தின் ஊனங்கள்

தெரிந்தன

மூட இருள், ஓடி ஒழிந்தது.

பயிரை மட்டும் பார்த்தனர்

பலர்

வயிறை மட்டும் பார்த்தனர்

சிலர்

வள்ளலாரோ!

பயிரையும் பார்த்தார்

வயிறையும் பார்த்தார்

வாடிவதங்கிக் கலங்கி

கண்ணீர் வடித்தார்

கடவுளின் உருவத்தை

கற் சிலையாக

காண்பதற்கு,

கல்லைச் செதுக்கி

காயப்படுத்த வேண்டும்

அந்த கல்கூட காயப்படக்கூடாது என

கண்ணீர் விட்டார்

அதனால்தான்,

உருவ வழிபாட்டையே

ஒதுக்கினாரோ!

அக்கால மன்னர்கள்

வள்ளலாய் வளர்ந்திட

அழியக்கூடிய

பொன்னைக் கொடுத்தார்

பொருளைக் கொடுத்தார்

வள்ளலாரோ!

அழியாத!

அன்பைக்கொடுத்தார்

அருளைக்கொடுத்தார்

கருணையைக் கொடுத்தார்

கனிவைக் கொடுத்தார்

பணிவைக்கொடுத்தார்

பண்பைக்கொடுத்தார்

உண்மையைக் கொடுத்தார்

நன்மையைக் கொடுத்தார்.

சாதிகள் இல்லாத

சமயங்கள் இல்லாத

சன்மார்க்கம் வைத்து

நன்மார்க்கம் நாட்டினார்.

அஞ்ஞான இருள் அகற்ற

விஞ்ஞான விளக்கேற்றி

மெய்ஞான வழிகாட்டி

மெய்யான ஒளி காட்டினார்

உயிர்கள் உய்வடைய

ஜீவகாருண்யம்

ஜீவ காரணம் என

எல்லா

ஜீவன்களுக்கும் சொன்னார்

அவர் மனிதாபிமானை மட்டுமல்ல

உடலினுள் ஊடுருவிப் பார்த்த

உயிர் அபிமானி

வள்ளல் களுக்கெல்லாம்

தலைவர் போல்

வாழ்ந்ததால் , வள்ளலார் ஆனார்

நம்

உள்ளமெலாம் நிறைந்தார்

ஒளியானார்,,,,,,

தேசிய வலிமை பத்திரிகை

2008 - கவிஞர் முகவை சந்துரு, இராமநாதபுரம்.