உள்ளத்தில் கருணை உடையவன் தான் எவ்வுயிரையும் தம்முயிராக எண்ணிப் போற்றக்கூடும். மன்னுயிரெல்லாம் கடவுள் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணரக்கூடும். கருணை உடைய கண்களுக்கு உலகுயிர்த்திரளுக்கு மத்தியில் எந்தவித வேறுபாடும் தோன்றாது. ‘உற்றநோய் நோன்றல்; உயிருக்கு உறுகண் செய்யாமை’ என்று வள்ளுவர் பேசும் அறக்கொள்கை இவ்வருள் பெற்றார் மட்டுமே செயல்படுத்தக் கூடிய ஒன்று. உண்மை நெறியாகிய கடவுள் நெறியை அடைவதற்கான நால்வகை ஒழுக்கங்களான இந்திரிய ஒழுக்கம், ஜீவஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், இந்நான்கிலும் ஜீவ ஒழுக்கமும், ஆன்ம ஒழுக்கமும் உயிர்க்கருணையின் அடிப்படையில் எழுந்தவை. ஆண் பெண் முதலிய யாரிடமும், சாதி சமய மத ஆச்சிரம ஆசார பேதமனைத்தும் நீக்கி எல்லோரையும் தம்மவர்களாய் கொள்ளுதல் ஜீவ ஒழுக்கம் என்றும், யானை முதல் எறும்பு வரை தோன்றிய எல்லா உயிர்களிடத்துமுள்ள ஜீவான்மாவே திருச்சபையாகவும் அதனுள் பரமான்மாவே பதியாகவும் கொண்டு வேறு பாடகற்றி, எல்லாந்தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கம் என்றும் பேசப்படுகிறது. இந்த இருவகை ஒழுக்கங்களுக்கும் அடிப்படைதான் எவ்வுயிரும் தம்முயிராய் கொள்ளும் பண்பு. இதனை அருட்பா எடுத்தியம்பும் அழகே தனியானது.
எத்துனையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர்போல் லெண்ணி
யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் யுவக்கின்றார் யாவர் அவர் உள்ளந்
தான் சுத்த
சித்துருவாய் யெம்பெருமான் நடம்புரிய மிடமெனநான்
தெரிந்தேனந்த
வித்தகர் தம் அடிக்கவேல் புரிந்திடவென் சிந்தைமிக விழைந்
ததாலோ’
(ஆறாந்திருமுறை, அகவல் 125 பாடல் 2)
உயிர்கள் அனைத்தினுள்ளும் திருநடம், புரிகின்றான் இறைவன் என்பதனை
உணர்ந்தவன் கொலைத் தொழிலையும் புலைப்பசியையும் அறவே நீக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்வான்.
‘’உயிருள்யாம் எம்முள் உயிர் இவையுணர்ந்தே
உயிர் நலம் பரவுகவென் றுரைத்த மெய்ச்சிவமே”
என்றும்,
“உலகினில் உயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க;
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக வென்றனை
என்றும்,
“உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட
இலமுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை”
என்றும் அகவல் வரிகள் உயிர்க்கருணை பற்றிப் பேசுகின்றன,.
தொடரும்……..