Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணல்


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பாள் தமிழ் மூதாட்டி ஒளவை. பெறுவதற்கரிய மானிடப் பிறவியை பெற்றுக் கொண்டவன், தன் பிறவியின் நோக்கத்தை தன் வாழ்நாட்காலத்தில் உணர்ந்து செயல்படுத்த வேண்டியது அவன் கடமையாகும். மனிதப் பிறவியெனும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டவன், அப்பிறப்பினால் தான் அடையக்கூடிய ஆன்ம லாபத்தை உரிய காலத்தில் உணர்ந்து, அறிந்து, அடைந்து, அனுபவிக்க வேண்டும். எல்லா உலகங்களையும், புவனங்களையும், பொருட்களையும், உயிர்களையும் ஒழுக்கங்களையும் அருட்சக்தியால் தோற்றுவித்து விளக்கம் செய்கின்ற இயற்கை வடிவினனாகிய கடவுளின் பூரண அருளையும் இயற்கை இன்பத்தையும் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியா வாழ்வே ஆன்மலாபம். அத்தகைய பெரியவாழ்வை அடைவதற்கான வழிகளைப் பல மெய்யடியார்களும், ஞானியரும், தத்தம் அருள் அனுபவத்திற்கு ஏற்ற வகையில் கண்டு தெளிந்திருக்கின்றார்கள். இறைவனோடு மகிழ்ந்து கலந்து வாழ்கின்ற சுகவாழ்விற்கு அருட்பிரகாச வள்ளலும் வழிகாட்டியிருக்கிறார். அவர் காட்டிய நெறி அருள் நெறி, அன்பு நெறி, ஜீவகாருண்ய ஒழுக்க நெறியாலன்றி , வேறெந்த வகையிலும் இறைவனின் பெருங்கருணையைப் பெற இயலாதென்பதனை திருவருட்பாத் திரு நூலைப்போன்று வெறெந்த நூலும் தெளிவாக இந்நாள் வரை பேசியதில்லை. உயிர்க்கருணையாகிய ஜீவகாருண்யம் தோன்றும்போது, அன்பும் அறிவும் அதனைச் சார்ந்த அனைத்துப் பண்புகளும் தோன்றுகின்றன. உயிர்க்கருணை மறையும்போது அந்த நற்பண்புகளும் மறைந்து போகின்றன. எல்லா உயிர்களிடத்தும் எந்தவித வேறுபாடுமின்றி காட்டப்படவேண்டிய உயிர்க்கருணைதான் தனிப்பெருங்கருணை என்ற தகைசான்ற சொற்கொண்டு அழைக்கிறார் வள்ளற்பெருமான்.

தொடரும்.